தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், மதுரை AIIMS மருத்துவமனை திட்டம் மீண்டும் அரசியல் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. 2019 ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரை தோப்பூர் பகுதியில் உலகத் தரத்திலான AIIMS மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ.2,021 கோடி மதிப்பீட்டில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 782 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் இத்திட்டத்தில் முதற்கட்டமாக 13.05 லட்சம் சதுர அடி பரப்பளவில் மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்வி வளாகம், நிர்வாக கட்டிடங்கள், பிரதான மருத்துவமனை, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட 13 கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளன.
இரண்டாம் கட்டத்தில் 10.26 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஆடிட்டோரியம், குடியிருப்பு வளாகங்கள், இயக்குநர் பங்களா, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆயுஷ் மருத்துவ பிரிவு உள்ளிட்ட 16 கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன. மொத்தம் 29 கட்டிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. 3டி மாடல் வீடியோ வெளியிடப்பட்டபோது முதற்கட்ட வளாகம் ஜனவரி மாதத்தில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: BREAKING! துவங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு!! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிஸ்ஸிங்! அதிருப்தி!
ஆனால் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னரும் இன்னும் திறக்கப்படவில்லை. பெயிண்டிங் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. மருத்துவ இயந்திரங்கள் வாங்குதல், பணியாளர்கள் நியமனம் உள்ளிட்டவை இன்னும் முடியவில்லை. இதனால் மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 23, 2026) சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அவர் வந்துள்ளார். இந்த சூழலில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். இனிமேல் அடிக்கடி வருவார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் மதுரை AIIMS மருத்துவமனை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று கேட்டால், அதற்கு ஒரு விடிவு காலமாக இருக்கும். 8 ஆண்டுகளாக கட்டுமானம் நீண்டு வருகிறது. போட்டோஷூட்டுக்கு மட்டும் வரும் ஆட்சியல்ல இது” என்று கடுமையாக விமர்சித்தார்.
மதுரை AIIMS திட்டம் 2019-ல் அறிவிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்னும் முழுமையாக திறக்கப்படாமல் இருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தென் தமிழக மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் நிறைவேறவில்லை. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் இந்த கோரிக்கை எதிர்க்கட்சியினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதற்கு எப்படி பதிலளிப்பார், பிரதமர் மோடியிடம் இந்தக் கேள்வியை எழுப்புவாரா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும். மதுரை AIIMS திறப்பு தமிழக அரசியலில் மீண்டும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உதய்ணா!! ரொம்ப தப்புண்ணா!! எப்போ சார் துவக்கி வைப்பீங்க! பாலமேடு மக்கள் ஆதங்கம்!