மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாகத் திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் (Drones) பறக்க முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அறிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8 மற்றும் 09 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமம் மற்றும் உலகப் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி, அவர் பயணிக்கும் வழித்தடங்கள், ஹெலிபேட் தளம், ரமணாசிரமம் மற்றும் அண்ணாமலையார் திருக்கோயில் வளாகம் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகாரிகளின் தீவிர கள ஆய்வு: மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு தொடர்பு அதிகாரிகள் (Advance Security Liaison - ASL) குழுவினர் இன்றைய தினம் கிரிவலப் பாதையில் உள்ள ரமணாசிரமம் மற்றும் அருணாசலேஸ்வரர் கோயில் வளாகப் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு தணிக்கை மற்றும் கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) உதயகுமார் மற்றும் உயர் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!
ட்ரோன்கள் பறக்கத் தடை: பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டும், மத்திய அமைச்சரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரு தினங்களுக்குத் திருவண்ணாமலையில் ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAVs) அனுமதி இன்றிப் பறக்கவிடத் தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டுத் திருவண்ணாமலை நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தி. மலையில் அரசு பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு..! சிக்கிய 5 பேர்... தீவிர விசாரணை..!!