அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை கடந்த ஜூலை 7ம் தேதி அன்று கோவை மாவட்டத்தில் தொடங்கினார். இந்தப் பயணம் தமிழகத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, திமுக ஆட்சியின் குறைபாடுகளை விமர்சித்து, அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கோவையில் தொடங்கிய இப்பயணத்தில், விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் சூளை உற்பத்தியாளர்களைச் சந்தித்து பழனிசாமி உரையாற்றினார். மேட்டுப்பாளையத்தில் உள்ள வனப்பத்திரகாளியம்மன் கோயிலில் தரிசனத்துடன் தொடங்கிய இந்தப் பயணத்தில், ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களைச் சந்தித்து, திமுகவின் “ஊழல் ஆட்சி” முடிவுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: அதிமுகவை அக்கு, அக்கா பிரிச்சி போட்டுடுவாங்க... எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த திருமா...!
அதன்படி 15-வது நாளான நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது, தமிழகத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற பெயரில் புதிய பிரச்சார முன்னெடுப்பை இன்று தொடங்கினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தின் கீழ், திமுக அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை மக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கில் இந்த பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு மற்றும் மக்களுக்கு எதிரான கொள்கைகளை விமர்சித்து, அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறினார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, கட்சியின் இழந்த வாக்கு வங்கியை மீட்கும் முயற்சியாக இந்த பிரச்சாரம் பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் திமுகவின் தவறுகளை வெளிப்படுத்தவும், அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களைப் பரப்பவும் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்தவும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.
இந்த பிரச்சாரம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை கடுமையாக விமர்சிக்கும் இந்த முன்னெடுப்பு, அதிமுகவின் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், திமுகவின் பதிலடி மற்றும் மக்களின் எதிர்வினையைப் பொறுத்தே இந்த பிரச்சாரத்தின் தாக்கம் தீர்மானிக்கப்படும்.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் இருப்பதை மறந்து எடப்பாடி வெளியிட்ட அறிவிப்பு... கடுகடுக்கும் இந்து முன்னணி...!