வாஷிங்டன், டிசம்பர் 13: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலியம் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா ரஷ்யாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், அமெரிக்காவிலேயே டிரம்பின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் டிரம்பின் அறிவிப்பை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 50 சதவீத வரி விதிப்பு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களான டெபோரா ரோஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்டு வந்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக திரும்பும் அமெரிக்கா! பின்னணியில் பாக்.,?! முன்னாள் பென்டகன் அதிகாரி சந்தேகம்!
இந்த தீர்மானம் அமெரிக்காவின் ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசென்டேடிவ்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது டிரம்பின் தன்னிச்சையான வர்த்தக நடவடிக்கைகளை சவால் செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
வட கரோலினா, வட டெக்சாஸ் போன்ற அமெரிக்க மாநிலங்கள் இந்தியாவுடன் கலாச்சாரம் மற்றும் வர்த்தகம் சார்ந்த தொடர்புகளை கொண்டுள்ளன. டிரம்பின் வரி விதிப்பால் இந்த மாநிலங்களில் வசிக்கும் மக்கள் விலைவாசி உயர்வு, வர்த்தக பாதிப்பு போன்ற பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த வரி அமெரிக்காவின் சொந்த நலன்களை பாதுகாப்பதற்கு பதிலாக எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்திய வம்சாவளி அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி இது குறித்து கூறுகையில், "அமெரிக்காவின் நலன்களையோ அல்லது பாதுகாப்பையோ முன்னேற்றுவதற்கு பதிலாக, இந்த வரிகள் எதிர் விளைவுகளை உருவாக்குகின்றன. இவை விநியோக சங்கிலிகளை சீர்குலைக்கின்றன. அமெரிக்க தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன. மக்களுக்கான செலவுகளை அதிகரிக்கின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும்" என்று தெரிவித்தார்.
இந்த தீர்மானம் அமெரிக்கா-இந்தியா உறவை மீட்டெடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. டிரம்பின் வரி அறிவிப்பு ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது. ஆனால், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை பாதிக்கும் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர். இந்த தீர்மானம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும், இது டிரம்ப் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: THE GOAT: கொல்கத்தாவில் பிரம்மாண்ட சிலை... லியோனல் மெஸ்ஸி திறந்து வைப்பு...!