அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என கடந்த 6ம் தேதி அறிவித்தார். இந்த வரி, (ஆகஸ்ட் 27) நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே 25% வரி அமலில் இருப்பதால், இந்திய பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயர்கிறது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் வாங்குதலுக்கு எதிரான தண்டனையாகவும், அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் $86.5 பில்லியன் ஏற்றுமதி சந்தையில் 55% பாதிக்கப்படலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பாதிக்கப்படும் முக்கிய துறைகளில் ஜவுளி, நகைகள், கடல் உணவுகள் (குறிப்பாக இறால்), தோல் பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் அடங்கும்.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிக நிறுத்தம்.. ட்ரம்பின் வரி உயர்வுக்கு இந்தியாவின் பதிலடி..!!
இந்திய இறால் ஏற்றுமதி, ஏற்கனவே 2.49% ஆன்டி-டம்பிங் வரியையும், 5.77% கவுண்டர்வெயிலிங் வரியையும் சந்தித்து, இப்போது 58.26% வரை வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களை வியட்நாம், பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் போட்டியில் பின்னடைய வைக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்திய அரசு இந்த வரியை “நியாயமற்றது, நியாயப்படுத்த முடியாதது” என விமர்சித்து, தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலன்களை எந்த விலையிலும் பாதுகாப்போம் என உறுதியளித்தார்.
இரு நாடுகளும் 2030ஆம் ஆண்டுக்குள் $500 பில்லியன் வர்த்தக இலக்கை அடைய முயலும் நிலையில், இந்த வரி பேச்சுவார்த்தைகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. சந்தைகளில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறைந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.27,000 கோடி பங்குகளை விற்றுள்ளனர்.

மருந்து மற்றும் மின்னணு பொருட்களுக்கு இந்த வரி பொருந்தாது என்றாலும், இந்திய பொருளாதார வளர்ச்சி 6%க்கு கீழே சரியலாம் என மூடிஸ் எச்சரிக்கிறது. இந்தியா-அமெரிக்க உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த நடவடிக்கை, வர்த்தக ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் உத்தியாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆய்வுக்கு உட்படுத்தப்படும் 5.5 கோடி விசாக்கள்.. அதிபர் டிரம்ப்பின் அடுத்த மூவ் என்ன..??