அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து தீவை வாங்குவதற்கான தனது விருப்பத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இந்தத் தீவை அமெரிக்காவுக்கு ஒப்படைக்காவிட்டால், ராணுவ ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று அவர் எச்சரித்துள்ளார். இத்தகைய அறிவிப்புகள் உலக அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அமெரிக்கா-கனடா இணைந்த வட அமெரிக்க வான் பாதுகாப்பு கட்டளை (NORAD) விமானங்கள் கிரீன்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை கிரீன்லாந்தின் பிடூஃபிக் விண்வெளி தளத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளன.

டிரம்ப்பின் தீவிரமான கருத்துகளுக்கு மத்தியில் இந்த ராணுவ விமானங்களின் வருகை, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. NORAD அமைப்பு இதை நீண்டகால திட்டத்தின் அங்கமாகக் குறிப்பிட்டுள்ளது. "அமெரிக்கா மற்றும் கனடாவின் தளங்களில் இருந்து வரும் விமானங்கள், கிரீன்லாந்தின் பிடூஃபிக் தளத்துடன் இணைந்து செயல்படும். இது அமெரிக்கா, கனடா, டென்மார்க் இடையேயான நீடித்த பாதுகாப்பு கூட்டுறவை வலுப்படுத்தும்" என்று NORAD தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கிரீன்லாந்து டென்மார்க்கிற்கே சொந்தம்! அமெரிக்காவின் ஆதிக்க முயற்சிக்கு ரஷ்யா முட்டுக்கட்டை!
டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. NORAD என்பது அமெரிக்கா-கனடா நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பாகும். வட அமெரிக்காவின் வான் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அலாஸ்கா, கனடா, அமெரிக்க கண்டப் பிராந்தியங்கள் வழியாக வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்கிறது. இந்த நடவடிக்கை வழக்கமானதுதான் என்றாலும், டிரம்ப்பின் கிரீன்லாந்து தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு இடையே இது நிகழ்ந்துள்ளதால், கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
ஐரோப்பிய தலைவர்கள் டிரம்ப்பின் மிரட்டல்களுக்கு கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆர்க்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், நார்வே, நெதர்லாந்து, பின்லாந்து போன்ற நாடுகள் தங்கள் ராணுவ வீரர்களை கிரீன்லாந்துக்கு அனுப்பின. டென்மார்க் ஏற்பாடு செய்த ராணுவப் பயிற்சியில் இந்நாடுகள் பங்கேற்றன. மேலும், கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான தனது முயற்சியை எதிர்த்தால், டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் மீது வரி விதிப்பேன் என்று டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தினார். பிப்ரவரி 1 முதல் 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், ஜூன் 1 முதல் அது 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்தார். பல ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற டென்மார்க், இப்போது திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் கூறினார்.

கிரீன்லாந்தை விரைவில் அமெரிக்காவுக்கு ஒப்படைக்காவிட்டால், இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்று டிரம்ப் தெரிவித்தார். இந்தச் சூழலில், கிரீன்லாந்தின் உரிமை தொடர்பான பதற்றம் உலக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்க்டிக் பிராந்தியத்தின் வளங்கள் மற்றும் மூலோபாய முக்கியத்துவம் காரணமாக, பெரிய நாடுகளிடையே போட்டி தீவிரமடைந்து வருகிறது.
இதையும் படிங்க: கிரீன்லாந்து விவகாரம்: டிரம்ப் சொல்றத சீரியஸா எடுத்துக்கோங்க..!! ஜே.டி.வான்ஸ் அதிரடி..!!