தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் உச்சகட்ட வெப்பத்தை எட்டியுள்ளது. நாளை (மார்ச் 11) மாலை திருச்சியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்தப் பயணம் குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், திமுக அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
நாளை மாலை 6:30 மணியளவில் திருச்சியில் நடைபெறவுள்ள தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் நான் இணைய உள்ளேன். மாநிலம் முழுவதும் தேஜ கூட்டணியின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் கண்டு திமுக தெளிவாகப் பீதியடைந்துள்ளது (Rattled) எனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசின் தவறான நிர்வாகம் மற்றும் நிறைவேற்றப்படாத பொய் வாக்குறுதிகளைத் தமிழக மக்கள் நன்கு உணர்ந்துவிட்டனர் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

அதனால்தான், தமிழக மக்கள் தேஜ கூட்டணியின் நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்திற்கான திட்டங்களுடன் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் நாளை மாலை 6:30 மணிக்கு இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் மோடியுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தேஜ கூட்டணியின் அனைத்து முக்கியத் தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்ற உள்ளனர்.
இந்தப் பொதுக்கூட்டத்திற்காகச் சுமார் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 60 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடங்களும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நேற்று திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில், பாஜகவை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் முழங்கிய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "திமுகவிடம் 3 தொகுதிகள் வேண்டும்": அண்ணா அறிவாலயத்தில் அதிமமுக அதிரடி கோரிக்கை!