திருஅருட்பிரகாச வள்ளலாரின் 203-வது அவதார ஆண்டு மற்றும் 159-வது தருமச்சாலையின் தொடக்க ஆண்டை முன்னிட்டு, சென்னையில் நடைபெறவுள்ள "அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026"-க்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மயிலாப்பூரில் மாநாட்டுப் பணிகளுக்கான கொடியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஏற்றி வைத்தார்.
இந்த மாநாட்டைக் கொண்டாடும் வகையில், கடந்த ஓராண்டு காலமாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கலைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் மற்றும் கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. "வள்ளலார் காட்டிய ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகுக்குச் சொல்லும் வகையில், இந்த அறப்பணிகள் அனைத்தும் தமிழக முதல்வரின் நேரடி வழிகாட்டுதலில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன" என அமைச்சர் தெரிவித்தார்.
மயிலாப்பூர் ஒரு சர்வதேச நகரமாகத் திகழ்வதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அங்கு மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கானச் சூழலை இந்த மாநாடு உருவாக்கும் என்றார். "வள்ளலார் பிறந்த மருதூர் கிராமத்தை ₹3.5 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து, அவரது புகழுக்குத் தமிழக முதல்வர் மகுடம் சூட்டியுள்ளார். வள்ளலாரைப் போற்றும் முதல் ஆட்சியாளராக நம் முதல்வர் திகழ்கிறார்" என அவர் புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க: திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி 'வள்ளலார் நெடுஞ்சாலை'! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
வள்ளலாரின் பிறந்த நாளைத் 'தனிப்பெருங்கருணை நாளாக' அறிவித்து, அந்த நாளில் அரசு சார்பில் பல்வேறு நற்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தைப்பூசத் திருநாளில் வடலூரில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் சூழலில், அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வள்ளலார் பன்னாட்டு மையத்தை உருவாக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், தற்போது சுமார் ₹10 கோடி மதிப்பீட்டில் பன்னாட்டு மாநாட்டிற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
"வள்ளலாரின் கொள்கைகளான பசிப்பிணி போக்கல் மற்றும் ஜீவகாருண்யத்தைப் பின்பற்றி நடக்கும் இந்த ஆட்சியின் கீழ், உலகளாவிய வள்ளலார் மாநாடு நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமை. இந்த இனிய தருணத்தில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அமைச்சர் சேகர்பாபு தனது உரையில் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஜோதியாய் தெரிந்த வள்ளலார்! வடலூரில் 7 திரைகள் நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம்..!