மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை விசிக தலைவர் தொல் திருமாவளவன் திடீரென சந்தித்து பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் கருத்தியல் ரீதியாக நிறைய வேறுபாடுகள் உண்டு. பாஜகவை விசிக தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக விமர்சித்து பேசி வருவது வழக்கம். அதேபோல் பாஜகவும் திருமாவளவனை விமர்சித்து பேசுவதை வழக்கமாகவே கொண்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியை திருமாவளவன் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதிமுக - பாஜக கூட்டணி வரும் தேர்தல் வரை கூட நீடிக்காது என்று திருமாவளவன் அண்மையில் பேசியிருந்தார். இதற்கு பதிலடியாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறிவிடும் என்று பேசியிருந்தார்.
இப்படி எதிரும் புதிருமாக இரு தரப்பும் பேசி வரும் நிலையில் திருமாவளவன் மத்திய இணை அமைச்சர் எல். முருகனையும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனையும் திடீரென சந்தித்து பேசினார். இச்சந்திப்பு திருச்சி விமானத்தில் நடைபெற்றுள்ளது. விமான நிலையத்தில் திடீரென சந்தித்துக் கொண்டதாக திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: திருமாவளவன் விரும்புவது இதைத்தான்... திமுக கூட்டணியில் குண்டை போட்ட நயினார் நாகேந்திரன்!!

அப்போது பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துககளை தெரிவித்ததாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில்,"இன்று (மே 23) திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் எதிர்பாராதவிதமாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்தேன். பாஜகவின் மாநில தலைவராகப் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அந்த கூட்டணி நீடிக்குமா? எங்க கூட்டணியை எதிர்க்க ஆளே இல்லை... அடித்து சொன்ன திருமாவளவன்!!