இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் பதவி வகித்து வந்தார். தற்போது அவரது பதவி காலம் முடிவடைந்துள்ளது. இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் (CPI) தமிழ்நாடு மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை சூளைமேட்டில் இன்று நடைபெற்ற மாநில குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தத் தேர்வு கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் பரவலான ஆதரவைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மணிப்பூர் சென்ற பிரதமர் மோடி.. விமர்சித்த திமுக எம்.பி கனிமொழி..! பரபர பதிவு..!!
மு.வீரபாண்டியன், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், சமூக நீதி மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவராகவும் அறியப்படுகிறார். இவர் நீண்ட காலமாக கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து, தமிழ்நாட்டில் இடதுசாரி இயக்கத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். இவரது தலைமையில், கட்சி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை முன்னெடுத்து, மாநில அரசியலில் தனது செல்வாக்கை மேலும் விரிவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்வு குறித்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகளின் கூட்டணி மற்றும் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களுக்கு இவரது தலைமை புதிய உத்வேகத்தை அளிக்கும் என அவர்கள் கருதுகின்றனர். மு.வீரபாண்டியன், கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், முதலாளித்துவம் மற்றும் உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் உறுதி பூண்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அரசியல் பலத்தைக் கொண்டுள்ளது. மு.வீரபாண்டியனின் தலைமையில், கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் சமூகநீதி தொடர்பான பிரச்சினைகளில் கட்சி மேலும் தீவிரமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது தேர்வு, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் இடதுசாரி இயக்கங்களுக்கு புதிய திசையை வழங்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்! இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசன் அவர்களுக்கு நன்றி! ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்! என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தோழர் மு.வீரபாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி எல்லையற்ற மகிழ்ச்சியினை எனக்குத் தருகிறது. தோழர் மு.வீரபாண்டியன் மார்க்க்சிய, லெனினிய கொள்கைகளையும், பொதுவுடமை சித்தாந்தத்தையும் நேர்த்தியாகக் கற்றுத் தேர்ந்து அவற்றுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட செங்கொடி வீரர் ஆவார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு மிகச் சிறந்த போராளியாக தன் லட்சியப் பயணத்தை தொடர்ந்து வரும் தோழர் மு.வீரபாண்டியன் மிகச் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்து வருகிறார். இதுகாரும் பொறுப்பில் இருந்த தோழர் முத்தரசனை போலவே சக தோழர்களிடமும், அனைத்துக் கட்சியினரிடமும் மிகுந்த நேசத்தோடு மதித்துப் பழகக் கூடிய பண்பாளர் தோழர் மு.வீரபாண்டியன் ஆவார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலுவையும், மதிப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய வகையில் அவரது பணி சிறக்கவும், அவர் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி பெறவும் மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பில் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நயினார் தலைமையை ஏற்க மறுக்கும் அண்ணாமலை... பாஜகவுக்குள் நடப்பதை புட்டு, புட்டு வைத்த திருமா...!