தமிழக அரசியலில் புதிய அலை உருவாக்கி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் மீது "வீட்டுக்குள் இருந்து கட்சி நடத்துகிறார்", "மாசம் ஒரு முறைதான் வெளியே வருகிறார்", "மக்கள் தலைவராக இருக்க முடியாது" என்ற குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சி தலைவர்களால் தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்களுக்கு நடுவே, விஜய் எடுத்துள்ள புதிய முடிவு தவெக தொண்டர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தவெகவை 2023 பிப்ரவரியில் தொடங்கிய பிறகு, விஜய் விக்கிரவாண்டி, மதுரை மாநாடுகள், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் மட்டுமே நேரடி பிரசாரம் செய்துள்ளார். இன்னும் 27 மாவட்டங்களுக்கு ஒரு முறை கூட செல்லவில்லை. அடுத்ததாக வரும் 23-ஆம் தேதி வேலூரில் கூட்டம் நடைபெற உள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு, முக்கிய நகரங்களுக்கு மட்டுமே நேரில் செல்ல திட்டமிட்டுள்ள விஜய், மீதமுள்ள தொகுதிகளுக்கு நேரில் செல்ல முடியாது என்று முடிவு செய்துள்ளார். இதனால் 234 தொகுதிகளுக்கும் தனித்தனி வீடியோ பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார் என்று தவெக மேல்மட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காங்கிரஸே வந்தாலும் வேணாம்! மோடியை சமாளிக்க முடியாது! புது ரூட்டில் தவெக!! விஜய் எடுத்த மாஸ்டர் மூவ்!

திட்டத்தின்படி, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஒவ்வொரு தொகுதிக்கும் தனியாக வீடியோ எடுக்கப்படும். அந்த வீடியோவில் விஜய் வேட்பாளரின் பெயரை சொல்லி, அந்த தொகுதிக்கான சில முக்கிய வாக்குறுதிகளை அறிவிப்பார். ஒரு நாளைக்கு 10 தொகுதிகளுக்கான வீடியோக்கள் வெளியிடப்படும். இவற்றை தொகுதி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிர வேண்டும். "இதுவே போதுமானது" என்ற மனநிலையில் விஜய் இருப்பதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த முடிவு தவெகவின் அடித்தள நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மாவட்ட செயலாளர்கள் கூறுகையில், "வீடியோ பிரசாரம் தேர்தலில் ஒரு அம்சமாக இருக்கலாம். ஆனால் அதையே பிரதானமாக செய்வது தவறு. விஜய் நேரில் மக்களை சந்தித்து பேச வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் தொடர்பு பலவீனமாகிவிடும்" என்று கவலை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே "வீட்டுக்குள் இருந்து கட்சி நடத்துகிறார்" என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த வீடியோ மட்டும் தேர்தல் உத்தி தவெகவின் பலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், விஜய் நேரடி பிரசாரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சியினரிடையே வலுத்து வருகிறது. இந்த முடிவு தவெகவின் தேர்தல் வியூகத்தில் பெரிய திருப்புமுனையாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் கனவை சுக்குநூறாக உடைத்த சர்வே!! சைலண்டாக காய் நகர்த்தும் விஜய்! சிறுபான்மை வாக்கு வங்கி ரிசல்ட்!