தமிழக சட்டசபை தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) ஆகியோர் தனது கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இருவரும் கூட்டணிக்கு வந்தால், கொங்கு மண்டலத்தை செங்கோட்டையன் வசம் ஒப்படைத்தது போல, தென் மாவட்டங்களை ஓபிஎஸ் கட்டுப்பாட்டிலும், வட மாவட்டங்களை ராமதாஸ் கட்டுப்பாட்டிலும் கொடுக்க விஜய் முடிவு செய்துள்ளார். இந்த உத்தி தவெகவுக்கு பெரும் பலம் சேர்க்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் தென் மாவட்டங்கள் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய பகுதியாக இருக்கின்றன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் அதிமுக - பாஜக கூட்டணி 18 தொகுதிகளை மட்டுமே வென்றது.
இதையும் படிங்க: 2026 தேர்தல் வெற்றிக்கு விஜய் வியூகம்!! தவெக தனித்து நிற்க முடிவு! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!
அப்போது டிடிவி தினகரனின் அமமுக 23 தொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கு காரணமானது. முக்குலத்தோர் சமூகத்தின் ஆதரவு அமமுகவுக்கு இருந்ததால், எடப்பாடி பழனிசாமி அமமுகவை கூட்டணிக்கு இழுத்தார். ஆனால் இம்முறை ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைக்க பழனிசாமி மறுத்து வருகிறார். இதனால் முக்குலத்தோர் வாக்குகள் எங்கு செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதே நேரத்தில் திமுக தரப்பிலும் ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் ஓபிஎஸ் திமுகவுடன் கைகோர்க்க தயக்கம் காட்டி வருகிறார். திமுகவினர் பதற்றமடைவதற்கு முக்கிய காரணம் விஜய்யின் செல்வாக்கு தான்.
விஜய் முதல்முறையாக தேர்தலில் நிற்கிறார். இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளை விஜய் பெருமளவு ஈர்ப்பார் என்று கணிக்கப்படுகிறது. எனவே ஓபிஎஸ் தவெகவுடன் இணைந்தால் திமுகவுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்ற அச்சம் திமுகவினரிடம் உள்ளது.
ராமதாஸ் தரப்பை திமுகவில் சேர்ப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கையிலே உள்ளது. அதிமுக உடன் அன்புமணி ராமதாஸ் கூட்டணி அமைத்துள்ளதால், வன்னியர் வாக்குகள் அதிமுகவுக்கு செல்லும். இதனால் தலித் வாக்குகளை இழக்கக் கூடாது என்று திமுக தெளிவாக உள்ளது. இந்த சூழலில் ராமதாஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் தவெக உடன் கூட்டணி அமைப்பார்கள் என்று தெரிகிறது.
விஜய் இதை எதிர்பார்த்தே காத்திருக்கிறார். செங்கோட்டையன் வசம் கொங்கு மண்டலத்தை கொடுத்தது போல, ஓபிஎஸ் உடன் இணைந்தால் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்யலாம். ராமதாஸ் இணைந்தால் வட மாவட்டங்களில் வன்னியர் வாக்குகள் கிடைக்கும். சீனியர்களான இருவரும் விஜய்யுடன் கைகோர்த்தால் அது விஜய்க்கு பெரும் அரசியல் மதிப்பை கொடுக்கும். சில தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 21 கூட்டணி கட்சிகளுடன் களமிறங்கும் திமுக! வாக்கு சிதறலை தடுக்க மெகா வியூகம்!! ஸ்டாலின் ஃபார்முலா!