மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது. மத்திய அரசின் புதிய வக்பு சட்டமானது, இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தில் தலையிடுவதாகவின் இஸ்லாமியர்களின் வக்பு வாரிய சொத்துகளை அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் வக்பு சட்டத்தை முழுவதுமாக நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது இருப்பினும் அந்த சட்டத்தில் உள்ள சில விதிகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. வக்பு திருத்த சட்டம் முழுவதுக்கும் இடைக்கால தடை விதிக்க முகாந்திரம் இல்லை என்றும் அதில் சில பிரிவுகளுக்கு தங்கள் தடை விதித்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். வக்பு வாரியம் உருவாக்க ஒருவர் ஐந்து ஆண்டுகள் இஸ்லாமியத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற விதிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டதுடன் இஸ்லாத்தை பின்பற்றுபவரா என்பதை தீர்மானிக்க விதிகள் வகுக்கும் வரை இந்த தடை தொடரும் என்ற நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வக்பு திருத்த சட்ட வழக்கில் இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். வக்புக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார். வக்பு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வக்பு பயனர் என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை விதித்துள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: பட்டாசு விவகாரம்: தடை போடணும்னா நாடு முழுக்க போடுங்க.. சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி கருத்து..!!
மேலும், மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது., இதனால், இந்த வாரியங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும் என்றும் பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: விஜயலட்சுமி வழக்கு! சீமானை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும்... சுப்ரீம் கோர்ட் உத்தரவு