மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகளைப் போலியாகப் போட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அக்கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் இல்லங்கள் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் (TMC) தலைமை அலுவலகங்களில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் இன்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் சோவன்தேவ் சட்டோபாத்யாயவை நியமிக்கக் கோரி, திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரவைத் தலைவரிடம் கடந்த மாதம் கடிதம் ஒன்று அளிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருந்த அக்கட்சி எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்துகள் பல, அவர்களின் அனுமதியின்றி போலியாகப் போடப்பட்டிருப்பதாகக் கொல்கத்தா ஹரே ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சிஐடி அதிகாரிகள், கடிதத்தில் கையெழுத்திட்ட பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு ஆஜராகுமாறு மூன்று முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா ஹரிஷ் சாட்டர்ஜி சாலையில் உள்ள மமுதா பானர்ஜியின் இல்லத்திற்கு இன்று மாலை ஆறு பேர் கொண்ட சிஐடி அதிகாரிகள் குழுவினர் சோதனைக்காகச் சென்றனர். அந்த முகவரியே கட்சியின் அதிகாரப்பூர்வ அலுவலகமாகவும் செயல்படுவதால், அங்கு சோதனை நடத்த வேண்டியது அவசியம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடக்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் இந்தச் சோதனைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேச ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு!
எனினும், மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் வீட்டில் இல்லாததால் சோதனையை இரண்டு நாட்கள் தள்ளிவைக்குமாறு அக்கட்சியின் முன்னாள் எம்பி சுபாஷிஷ் சக்ரவர்த்தி கோரிக்கை விடுத்தார். ஆனால், விசாரணையைத் தாமதப்படுத்தக் கூடாது என்று கூறி, ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிஐடி அதிகாரிகள் மம்தா பானர்ஜியின் இல்லத்திற்குள் நுழைந்து சோதனையை மேற்கொண்டனர். அதே நேரத்தில், அபிஷேக் பானர்ஜியின் அலுவலகம் மற்றும் தொடர்புடைய முக்கிய இடங்களிலும் மற்றொரு சிஐடி அதிகாரிகள் குழுவினர் தங்களது சோதனையை நடத்தினர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தனது பலத்தை இழந்துள்ள நிலையில், தற்போது எழுந்துள்ள இந்த போலி கையெழுத்து விவகாரமும், முன்னாள் முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற சிஐடி சோதனையும் மேற்கு வங்காளம் மட்டுமின்றி தேசிய அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: புதிய பொதுப்பணித்துறை செயலாளராக ஆர். செல்வராஜ் நியமனம்!