நடுத்தர குடும்பங்கள், சிறுக்குறு நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்டோருக்கு தீபாவளி போனஸாக ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டுவர உள்ளதாக சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி தற்போது உள்ள 5, 12, 18 மற்றும் 28% என்ற வரி அடுக்குகளை 5 மற்றும் 18%மாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
அதே நேரம் ஆடம்பர பொருட்களுக்கான வரியை 40%ஆக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தற்போது 12% வரி அடுக்கில் உள்ள அன்றாட வீட்டு உபயோக பொருட்கள், காப்பீட்டு பிரீமியம் தொகைகள் 5% ஜிஎஸ்டி வரி அடுக்கில் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தினசரி நுகர்வு பொருட்களான காய்கறிகள், ஸ்டேஷனரி பொருட்கள், சாக்லேட், மாவு வகைகள், நொறுக்கு தீனி வகைகள், நட்ஸ், கொக்கோ பொருட்கள் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், வெண்ணை, நெய் உள்ளிட்ட உணவு பொருட்களை 5% வரிக்குள் கொண்டுவர
திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர ஆடைகள், காலனி, கண் கண்ணாடி, சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும் 5% வரி அடுக்குக்குள் கொண்டுவர உள்ளதாக சொல்லப்படுகிறது. மருந்து பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து ஐந்து அல்லது வரி கிடையாது என அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல டெக்ஸ்டைல் உரம் உள்ளிட்ட வேளான் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியையும் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜூலை மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி.. மத்திய நிதி அமைச்சகம் தகவல்..!
டிவி, பிரிட்ஜ், ஏசி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களுக்கான வரியை 28 சதவீதத்தில் இருந்து 18%ஆக குறைக்க உள்ளதாகவும், ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரை 350சிசி வகை இருசக்கர வாகனங்களுக்கான வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 1200சிசி கொண்ட சிறியரக கார்களுக்கான ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரியை 31 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் வரை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல ஹைப்பிரிட் வகை கார்களுக்கான வரியையும் 18%ஆக குறைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நடவடிக்கையால் விவசாயம், ஜவுலி, உரங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஆட்டோமொபைல், கைவினை பொருட்கள், சுகாதாரம், காப்பீடு, கட்டுமானம், போக்குவரத்து போன்ற பொருளாதார துறைகளுக்கு பயனளிக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் புகையிலை மற்றும் பான் மசாலா ஆடம்பர பொருட்களுக்கு புதிதாக 40% ஜிஎஸ்டி என்கின்ற வரி அமைப்பை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வைரம், விலை மதிப்பற்ற கற்கள் ஏற்றுமதியை அடிப்படையாக கொண்ட பொருட்கள் அதே விகிதத்தில் தொடர்ந்து வரிவிதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. பெட்ரோலிய பொருட்கள் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரம்பிற்கு வெளியே தொடர்ந்து இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வரி திருத்தத்தால் அடிப்படை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவும், அத்தியாவசியமற்ற பொருட்களின் விலை பலமடங்கு உயரவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், சிவராஜ் சிங் சவகான், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். விரைவில் வரைவு ஜிஎஸ்டி கொள்கை வகுக்கப்பட்டு அது ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டு மாநில மற்றும் யூனியன் பிரதேச ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற்று அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி பிறந்த மண்ணில் இப்படியா? - 78 ஆண்டுகளுக்குப் பிறகு தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்த விடிவு...!