தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர் ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழக அமைச்சரவையை பொறுத்தவரை முதல்வருடன் சேர்த்து மொத்தம் 35 பேர் வரை இடம்பெறலாம். ஆனால் தற்போது வரை 10 பேர் மட்டுமே பொறுப்பில் உள்ளனர். வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட 25 இடங்கள் காலியாக உள்ள நிலையில், அதில் 23 துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று முதல் முதலாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உட்பட 23 பேர் பதவியேற்றுள்ளனர். தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள 38 வயது இளைஞரான விக்னேஷ் தனிக்கவனம் ஈர்த்துள்ளார்.
கோவை மாவட்டத்தின் பலம் வாய்ந்த அரசியல் புள்ளிகளைத் தோற்கடித்துச் சட்டமன்றத்திற்குள் நுழைந்த ஒரு முக்கியப் புதுமுக முகமாவார். கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள மச்சாம்பாளையத்தைச் சேர்ந்த இவருக்கு, பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்விப் பின்னணியுடன் சிசிடிவி கேமரா விற்பனை கடை நடத்தி வரும் தொழில்முறைப் பின்னணியும் உள்ளது. அதோடு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் மக்கள் மன்றத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, தற்போது த.வெ.க-வின் கோவை தெற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இதையும் படிங்க: #BREAKING: புதுவை தேர்தல்..!! நெடுங்காடு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி..!
சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் கோவை கிணத்துக்கடவு தொகுதியில் களம் கண்ட இவர், அத்தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த கே.வி.கே. கந்தசாமியின் பேரன் சபரி கார்த்திகேயன் மற்றும் 4 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செ. தாமோதரன் ஆகிய இரு பெரும் அரசியல் ஜாம்பவான்களையும் அதிரடியாக வீழ்த்தி, அதிமுகவின் தொடர் வெற்றி கோட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இத்தகைய எளிய பின்னணி கொண்ட ஒரு புதுமுக சட்டமன்ற உறுப்பினருக்கு, தமிழக அரசியல் களத்தில் எப்போதும் பெரும் விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகும் மிக முக்கிய இலாகாவான டாஸ்மாக் (மதுவிலக்கு) துறை ஒதுக்கப்பட்டிருப்பது தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: பொன்ராஜ்க்கு முன்ஜாமின் கிடைக்குமா..? தவறான முன்னுதாரணம் ஆகிடும்... காவல்துறை கடும் வாதம்..!