மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயபெருமாள், அவரது மனைவி சிவகாமி அம்மாள், இவர்களது மகள் நிகிதா. இவர் கொடுத்த புகாரில் தான் சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் ஊழியர் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி தமிழகத்தை உலுக்கி உள்ளது.
ஆரம்பத்தில் 9 சவரன் நகை காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார் தான் சம்பவத்தின் ஆரம்ப புள்ளி என கருதப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே திருட்டு புகார் கொடுத்த டாக்டர் நிகிதாவுக்கும், அஜித்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் இரவு நிகிதா பேசியதாக கூறப்படும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
அதில் கோயிலில் என்ன தகராறு நடந்தது என்பது குறித்து அவர் முகத்தை மறைத்துக்கொண்டு பேசியுள்ளார். தனது தாய் சிவகாமிக்கு வீல் சேர் ஏற்பாடு செய்து கொடுக்க அஜித்குமாரிடம் பேரம் பேசியது பற்றியும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் பைப்ல அடிச்சுதான் இவ்ளோ காயமா? 2வது நாளாக நீடிக்கும் விசாரணை.. நீதிபதிகள் விளாசல்..!

வீடியோவில் நிகிதா பேசியதை வைத்து பார்க்கும் போது, திருமங்கலத்தில் ஸ்கேன் எடுக்க டாக்டர் நகைகளை கழற்ற சொன்னதால் அதனை பையில் போட்டேன் என்கிறார். ஆனால் ஸ்கேன் எடுக்கவில்லை. அங்கிருந்து கழற்றிவைத்த நகை பையை காரில் பின் சீட்டில் வைத்துவிட்டு 40 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து திருபுவனம் கோயிலுக்கு வந்துள்ளார்.
அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த அஜித்குமாரிடம் வீல் சேர் ஏற்பாடு செய்து தர சொல்லி இருக்கிறார். அவரிடமே கார் சாவியும் கொடுத்து கார் பார்க் செய்ய சொன்னதாக சொல்கிறார். தரிசனம் முடிந்து வந்த பிறகு வீல் சேர் ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு அஜித்குமார் 500 ரூபாய் கேட்டுள்ளார்.
இது இலவச சேவை தானே என வாக்குவாதம் செய்த நிகிதா 100 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். அதன் பிறகே நகை காணாமல் போனது தெரியவந்து அறநிலையத்துறைக்கும், போலீசுக்கும் புகார் கொடுத்ததாக சொல்கிறார்.

இதில் கார் பார்க்கிங் செய்து கொடுத்தார் என்பதற்காக மட்டுமே அஜித்குமாரை குற்றவாளி போல அணுகி உள்ளனர். எந்த இடத்தில் நகை காணாமல் போனது என்பது குறித்து நிகிதாவுக்கே உறுதியாக தெரியவில்லை. திருமங்கலத்தில் இருந்து 40 கிலோமீட்டர் பயணித்து வந்துள்ள நிலையில் இடையில் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்காலம். வாய்மொழியாக நிகிதா ஒரு புகார் கொடுத்தார் என்ற காரணத்துக்காக அஜித்குமார் தண்டிக்கப்பட்டுள்ளார்.
அப்படியே அஜிக்குமார் 9 சவரன் நகை 2500 ரூபாய் பணம் திருடினார் என்றால், வீல் சேருக்கு 500 ரூபாய் கேட்டு வாக்குவாதம் செய்திருக்க அவசியமே இருக்காது என்கிற சந்தேகமும் எழுகிறது. அதிலும் காணாமல் போனதாக சொல்லப்பட்ட நகை காரில் இருந்தது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. முழுக்க முழுக்க இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கும் நிலையில் இப்போது நிகிதா தனது தாயுடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே பலமுறை பண மோசடி புகாரில் சிக்கியவர் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2011ல் திருமங்கலத்தை சேர்ந்த ராஜாங்கம் என்பவரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த வழக்கின் எப்ஐஆரில் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
அதுமட்டும் அல்லாமல், ஆலம்பட்டியை சேர்ந்த முத்துக்கொடி என்பவருக்கு சத்துணவில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.5 லட்சம் மோசடி செய்ததாகவும், முருகேசன் என்பவரிடம் நூலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.5 லட்சம் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும் திருமங்கலத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆசிரியர் பணி வாங்கி தருவதாக 9லட்ச ரூபாய் மோசடி செய்ததாகவும், செக்கானூரணி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு ஆசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.25 லட்ச ரூபாய் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. மொத்தமாக திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிகிதா மீது 8 பேர் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகிதா டாக்டர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் மருத்துவம் படித்தவர் அல்ல. அவர் பி.எச்டி. முடித்தவர் என்கிறார்கள். அவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. திருமங்கலத்தில் அவரது வீடு தற்போது பூட்டிக்கிடக்கிறது. நிகிதாவும், தாயாரும் எங்கு சென்றார்கள்? என்பது தங்களுக்கு தெரியாது என அக்கம்பக்கத்தினர் கூறினர். குற்ற பின்னணி கொண்டவர் சொன்னதை வைத்து ஒருவரை விசாரணை என்கிற பெயரில் போலீஸ் அடித்து கொன்ற சம்பவம் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. போட்டு பொளக்கும் அன்புமணி..!