தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் அதிகாரப்பூர்வ கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் இருந்து தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் திடீரென நீக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணத்தை மாநில அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என்றும், இதற்குப் பின்னால் உள்ள சக்திகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தித் தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மிகக் காட்டமாக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில், சமூகநீதி வரலாற்றைத் திரிக்கும் இத்தகைய அதிகாரத்துவப் போக்கு குறித்துக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி வரலாற்றைக் கூறும் பிரதான பகுதியில் இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டிருந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது; இதனையடுத்து எழுந்த கண்டனக் கணைகளின் தாக்கத்திற்குப் பிறகு, அத்தலைவர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்படும் எனத் துறை அமைச்சர் வி. சம்பத்குமார் சமாதானம் கூறியுள்ளார். எனினும், இத்தகைய வரலாற்றுத் துரோகத்திற்குக் காரணமான அதிகாரிகள் யார் என்ற கேள்விக்கு இதுவரை விடை அளிக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

தலைவர்களின் மகத்தான பங்களிப்பைச் சுட்டிக்காட்டிய அவர், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் மற்றும் நவீன இந்தியாவின் சிற்பியான ஜவஹர்லால் நேரு ஆகியோர் மதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமின்றி உறுதியாக நின்றவர்கள்; பிற்போக்குத் தனங்களையும், மதவாத அரசியலையும், வகுப்புவாதத்தையும் வாழ்நாள் முழுவதும் களத்தில் நின்று எதிர்த்துப் போராடியவர்கள். சமூக நீதிக்காகப் போராடியது மட்டுமன்றி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னதக் கோட்பாடுகளை இந்திய மண்ணில் வேரூன்றச் செய்த மகத்தான வழிகாட்டிகள் ஆவர். அப்படிப்பட்ட தலைவர்களின் பெயர்கள் அரசு ஆவணத்திலிருந்து நீக்கப்பட்டதை ஒருபோதும் தற்செயலான அல்லது சாதாரண பிழையாகக் கடந்துவிட முடியாது; இது முற்றிலும் ஒரு திட்டமிட்ட சதிச் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது என ஆணித்தரமாகச் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: எந்த ஆட்சி வந்தாலும் பெரியாரை தாண்ட முடியாது! நெல்லை திராவிடர் கழக மாநாட்டில் கி. வீரமணி அதிரடி!
மேலும், இம்மாபெரும் தலைவர்களின் பெயர்கள் மத அடிப்படைவாதிகளுக்கும், பிற்போக்குச் சக்திகளுக்கும் எப்போதும் எட்டிக்காய் போன்று கசப்பதாகும்; அவர்கள் மீதான வெறுப்பைத் தொடர்ந்து உமிழ்ந்து வரும் சக்திகளின் தலையீடு இதில் உள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு அரசு விரிவான மற்றும் நேர்மையான விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும். பெயர்களை நீக்கத் துணிந்த துறைசார்ந்த நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடுமையான விலைவாசி உயர்வு! சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!