ஒதுங்கிப் போகும் ஆள் நான் இல்லை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை உறுதியாகச் சந்திப்பேன்" என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் அதிமுக-வை ஒருங்கிணைத்து மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்பதே தனது இலக்கு என அவர் சூளுரைத்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசுகையில், "2026 தேர்தல் என்பது ஒரு சாதாரணத் தேர்தல் அல்ல; அது தமிழகத்திற்கு ஒரு நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும் தேர்தல். தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக, மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் தன்னிச்சையாகச் செயல்படுகிறது. குறிப்பாக, சில அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் சாதாரண ஊழியர்கள் வதைக்கப்படுகிறார்கள். 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததே சிலரின் புரிதல் இல்லாத தவறால்தான். அந்தத் தவறு மீண்டும் நிகழாமல் நான் பார்த்துக் கொள்வேன்" என அதிரடியாகத் தெரிவித்தார்.
கூட்டணி மற்றும் ஓபிஎஸ் உடனான சந்திப்பு குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் குறித்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றுடன் ஒன்று பேசுவது இயல்பானதுதான். ஓ.பன்னீர்செல்வம் என்னைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். நல்லபடியாக ஆட்சி அமைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் கூட. தேர்தலுக்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் திரைக்குப் பின்னால் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. எப்போது, யாருடன் என்பது குறித்து ஊடகங்களிடம் இப்போதே சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி, ஜெயலலிதா வழியில் ஒரு நல்லாட்சியைத் தர நான் ஒருபோதும் தயங்கமாட்டேன்" என்று தனது 'பகீர்' அரசியல் வியூகத்தை வெளிப்படுத்தினார். சசிகலாவின் இந்த அறிவிப்பு, 2026 தேர்தல் களத்தில் அதிமுக-விற்குள் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “விஜய் முதல்ல களத்துக்கு வரட்டும்!” – எங்களுக்கு கவலையே இல்ல: அமைச்சர் ஐ.பெரியசாமி சவால்
இதையும் படிங்க: காந்தி பெயரை வைத்து அரசியல் பண்ணுறாங்க! – எதிர்க்கட்சிகளுக்கு தமிழிசை பதிலடி