இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உற்சாகத்தை எப்போதும் உச்சத்தில் வைத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள மைதானங்களில் நடத்தப்பட உள்ளது. தொடரின் முதல் ஆட்டத்தில் கடந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை (எஸ்ஆர்ஹெச்) சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.

மற்றொரு முக்கிய ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை கவுஹாத்தியில் சந்திக்கிறது. அட்டவணையின் முதல் கட்ட விவரங்கள் சமீபத்தில் பிசிசிஐயால் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஐபிஎல் 2026 சீசனுக்கான பயிற்சி வசதிகள் குறித்து பிசிசிஐ கடுமையான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்து 10 அணிகளுக்கும் அனுப்பப்பட்ட 5 பக்க ஆவணத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விதிகளின் முக்கிய நோக்கம், அனைத்து அணிகளுக்கும் சமமான மற்றும் நியாயமான பயிற்சி வாய்ப்புகளை உறுதி செய்வதோடு, மைதானங்களின் தரத்தைப் பாதுகாப்பதாகும்.
இதையும் படிங்க: IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!
முக்கிய விதிகள் வருமாறு:
- ஒரு அணி பயிற்சி முடித்த பிறகு, அதே ஆடுகளம் அல்லது வலைப்பயிற்சி இடத்தை மற்றொரு அணி பயன்படுத்த அனுமதி இல்லை. ஒவ்வொரு அணிக்கும் புதிய ஆடுகளங்கள் (fresh nets) தயாரிக்கப்பட வேண்டும்.
- ஒரு அணி தனது பயிற்சியை முன்கூட்டியே முடித்தாலும், அந்த இடத்தை அடுத்த அணி பயன்படுத்த முடியாது. இது throwdowns மற்றும் range-hitting போன்ற பயிற்சிகளுக்கும் பொருந்தும்.
- ஒரே நேரத்தில் இரு அணிகளும் பயிற்சி செய்ய விரும்பினால், அணி மேலாளர்கள் பேசி முடிவெடுக்க வேண்டும். தேவைப்பட்டால், பிசிசிஐ தலையீடு செய்யும்.
- இந்த சீசனில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 2 பயிற்சிப் போட்டிகளை மட்டுமே விளையாட முடியும். இதற்கு பிசிசிஐயின் முன் அனுமதி கட்டாயம்.
- பயிற்சிப் போட்டிகள் மைதானத்தின் முக்கிய ஆடுகளத்தில் அல்லாமல், பக்கவாட்டு ஆடுகளங்களில் (side pitches) மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
- இரவு நேர பயிற்சிப் போட்டிகள் மின் விளக்குகளின் ஒளியில் நடத்தினால், அது 3.5 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கக் கூடாது.
- உள்ளூர் அணிக்கு பயிற்சிப் போட்டி நேர ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த கடுமையான விதிகள், கடந்த காலங்களில் ஏற்பட்ட சில சர்ச்சைகளைத் தவிர்க்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அணிகளின் பயிற்சி தரத்தை உயர்த்துவதோடு, மைதான பராமரிப்பையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் வெற்றிப் பசி குறித்து முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் சுவாரஸ்யமான கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் ஆர்சிபி முதல் கோப்பையை வென்ற பிறகு, கோலியின் பசி குறையவில்லை என்றும், மாறாக பேக்-டு-பேக் கோப்பை வெல்லும் ஆர்வம் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். “கோலியிடம் வெற்றி பெறும் பசி எப்போதும் இருக்கும். கடந்த சீசன் கோப்பை வென்ற பிறகு, அவர் இன்னும் அதிக ஆர்வத்துடன் இருப்பார். தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல அவர் விரும்புவார்” என்று ஜியோஸ்டாரில் பேசிய பதான் தெரிவித்தார்.
இந்த புதிய விதிகள், அட்டவணை மற்றும் வீரர்களின் உற்சாகம் ஆகியவை சேர்ந்து, ஐபிஎல் 2026-ஐ இதுவரை இல்லாத அளவுக்கு சுவாரஸ்யமாக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிங்க: IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!