தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர் ராதிகா சரத்குமார். இவர் 1978ஆம் ஆண்டு "கிழக்கே போகும் ரயில்" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தேசிய விருது, மூன்று தமிழ்நாடு மாநில விருதுகள், ஆறு பிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்ன திரையிலும் ஒரு கலக்கு கலக்கிய ராதிகா சரத்குமார், அவர் நடித்த சித்தி, செல்லமே, வாணி ராணி சீரியல்கள் அனைத்தும் தொடர்ந்து வெற்றி அடைந்தன. ராதிகா, ராடன் மீடியா ஒர்க்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, பல தமிழ் திரைப்படங்களையும் தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து வருகிறார். அரசியலில், 2006இல் அதிமுகவில் இணைந்து, பின்னர் கட்சி விரோத நடவடிக்கைகளால் நீக்கப்பட்டார். 2021 முதல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும், 2024இல் பாஜகவில் இணைந்து விருதுநகர் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் வெற்றி பெறவில்லை.
இதையும் படிங்க: மலைபோல் குவிந்த அவதூறு பதிவுகள்.. கடுப்பான நடிகை திவ்யா ஸ்பந்தனா.. அதிரடியாக இறங்கிய மகளிர் ஆணையம்..!!
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவரான ராதிகா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் கடந்த 28ம் தேதியே அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். மேலும் அவர் வீடு திரும்ப இன்னும் 5 நாட்கள் வரை ஆகும் எனச் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் திரையுலக வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராதிகாவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் அவரது கணவர் நடிகர் சரத்குமார் மற்றும் மகள் வரலட்சுமி ஆகியோர் மருத்துவமனையில் அவருடன் இருந்து ஆதரவு அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு கவலையில் உள்ள அவரது ரசிகர்கள், விரைவில் குணம் பெற வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பரவல் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: காற்றில் கலந்த 'கன்னடத்து பைங்கிளி'.. அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்..!