தமிழ் தொலைக்காட்சி உலகில் பிரபலமான நகைச்சுவைத் தொடரான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’-வை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. எந்த கவலையாக இருந்தாலும் இந்த சீரியலை பார்த்தால் போதும், மனதில் இருக்கும் கவலைகள் எல்லாம் மறந்துபோகும். அந்த அளவிற்கு மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்தது இந்த சீரியல்.

இந்நிலையில் இந்த தொடரின் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.என். சக்திவேல் (ஆகஸ்ட் 30) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 65. இவரது மறைவு தமிழ் தொலைக்காட்சித் துறையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடர், சன் தொலைக்காட்சியில் 2000 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி, ஐந்து பகுதிகளாக 453 அத்தியாயங்களுடன் மக்கள் மனதில் இடம்பிடித்தது.
இதையும் படிங்க: என்னடா இப்படி இறங்கிட்டீங்க..! படப்பிடிப்பில் இயக்குனருக்கு கும்மாங்குத்து..வீடியோவால் பரபரப்பு..!
இந்தத் தொடரை எஸ்.என். சக்திவேல் மற்றும் சுகி மூர்த்தி ஆகியோர் இயக்கினர். ராடன் மீடியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த நகைச்சுவைத் தொடர், மாமியார்-மருமகள் உறவை மையமாகக் கொண்டு, 1994 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஹிந்தி தொடரான ‘து து மெயின் மெயின்’ தொடரைத் தழுவி உருவாக்கப்பட்டது.
ஸ்ரீபிரியா, நளினி, நிரோஷா, தேவதர்ஷினி, வி.ஜே. சித்ரா, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இதில் நடித்து புகழ் பெற்றனர். எஸ்.என். சக்திவேல், தன் இயக்கத்தின் மூலம் இந்தத் தொடரை எளிமையான நகைச்சுவையுடன் பார்வையாளர்களை கவர்ந்தவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த காட்சிகள், குடும்ப பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
எஸ்.என். சக்திவேல், தனது திரைப்பயணத்தை சின்னத்திரைக்கு முன்னதாக திரைப்படங்களில் தொடங்கினார். அவர் இயக்கிய 'தண்ணீரில் கண்டம்' திரைப்படம், ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. இருப்பினும், இவரது முழுத் திறமையையும், நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்தியது சின்னத்திரைதான்.

இவரது மறைவு குறித்து சக நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். “எஸ்.என். சக்திவேல் அவர்களின் பங்களிப்பு தமிழ் தொலைக்காட்சி உலகில் மறக்க முடியாதவை. அவரது நகைச்சுவைத் தொடர்கள் எங்களை என்றும் சிரிக்க வைத்தன,” என ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். எஸ்.என். சக்திவேலின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவரது இழப்பை ஈடு செய்ய முடியாத துயரத்தில் உள்ளனர். அவரது ஆன்மா அமைதி அடைய இறைவனை வேண்டுவோம்.
இதையும் படிங்க: என்ன பத்தி பேச நீங்க யாரு..? கே.ஜி.எப் பட கதாநாயகனின் அம்மாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய நடிகை தீபிகா..!