தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அனுபமா பரமேஸ்வரன், சமீபத்தில் ஒரு சைபர் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து, அவதூறு தகவல்களுடன் பரப்பிய சிலருக்கு எதிராக, நடிகை கேரள சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வந்த கேரள போலீசார், அந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் என்று கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து நடிகை அனுபமா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் “சில நாட்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராமில் எனது பெயரில் மற்றும் எனது குடும்பத்தைப் பற்றியும், நண்பர்கள் மற்றும் இணை நடிகர்களை டேக் செய்து, மிகவும் ஒழுக்கமற்ற மற்றும் தவறான உள்ளடக்கம் பகிரப்பட்டிருப்பதை கவனித்தேன். அந்தப் பதிவுகளில் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் எந்த ஆதாரமுமில்லாத குற்றச்சாட்டுகள் இருந்தன. இது மிகவும் மனவேதனை அளித்தது. தொடர்ந்து விசாரித்ததில், ஒரே நபர் பல போலி கணக்குகளை உருவாக்கி, எனது பெயரைப் பயன்படுத்தி வெறுப்பு கருத்துக்களை இடுவதும், ஒவ்வொரு பதிவிலும் தீங்கான கருத்துக்களைப் பகிர்வதும் நோக்கமாக கொண்டிருந்தது என்பது தெரியவந்தது.
இதை அறிந்த உடனே, நான் கேரள சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தேன். அவர்கள் மிகவும் விரைவாகவும் திறம்படவும் நடவடிக்கை எடுத்தனர். அவர்களின் உதவியுடன், இதற்குப் பின்னால் இருந்த நபரை அடையாளம் கண்டறிந்தோம். எனக்கு அதிர்ச்சியளித்தது என்னவென்றால், அந்த நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் என்பதே. அவளது இளம் வயதை கருத்தில் கொண்டு, நான் அவளது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. அவளது எதிர்காலத்தையும் மனநலனையும் காக்கும் நோக்கத்துடன் இதை நான் மறைத்து வைக்கிறேன்.
இதையும் படிங்க: கேப்பில்லாம ட்ரோலால் அடிச்சாங்க.. ஆனா ஒரே ட்ரிக்கால் அத்தனையும் காலி செய்தேன்..! நடிகை அனுபமா ஓபன் டாக்..!

ஆனால், இந்தச் சம்பவத்தைப் பகிர்வதன் மூலம் ஒரு விஷயத்தை மிகவும் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன் - மொபைல் போன் வைத்திருப்பது, அல்லது சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் உரிமை இருப்பது, யாருக்கும் மற்றவர்களை அவமதிக்க, அவதூறு பரப்ப, அல்லது வெறுப்பை விதைக்க உரிமை அளிக்காது. ஒவ்வொரு ஆன்லைன் செயலுக்கும் அதன் சுவடு இருக்கும். அதன் பொறுப்பும் ஒருநாள் எதிர்கொள்ள வேண்டியதாகும். நாங்கள் சட்டரீதியான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளோம், மேலும் அந்த நபர் தனது செயலில் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். நடிகை அல்லது பொதுமக்களுக்குப் பிரபலமாவதால், அடிப்படை மனித உரிமைகள் யாரிடமும் பறிக்கப்படக் கூடாது. சைபர் தொந்தரவு ஒரு குற்றம், அது தண்டனைக்குரியது. ஒவ்வொருவரும் தங்களது செயல்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய காலம் இது” என பகிர்ந்துள்ளார்.
அனுபமா மேலும், அந்தப் பெண்ணுக்கு எதிராக சட்டப்படி வழக்கு தொடங்கப் பட்டுள்ளதாகவும், கேரள சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதே சமயம், அந்த இளம் பெண்ணின் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அனுபமா வெளிப்படுத்தவில்லை. “அவளது வாழ்க்கை அழியக்கூடாது என்பதற்காக நான் அவளது அடையாளத்தை மறைக்கிறேன். ஆனால், இத்தகைய செயல்கள் மன்னிக்கப்பட முடியாதவை” என அவர் கூறியுள்ளார். அனுபமாவின் இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே சைபர் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நடிகை அனுபமா எடுத்துள்ள இந்த நடவடிக்கை பலருக்கு எச்சரிக்கை மணியாக திகழ்கிறது.

அவரது இந்த முயற்சி, பிரபலங்களாக இருந்தாலும், மனித உரிமைகளில் சமத்துவம் இருக்க வேண்டும் என்ற ஒரு முக்கிய செய்தியையும் எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக “சமூக வலைதளங்கள் ஒரு பொழுதுபோக்கு தளம் அல்ல.. அது ஒரு பொறுப்பு மிக்க இடம்” என்கிற அனுபமாவின் வார்த்தைகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: கேப்பில்லாம ட்ரோலால் அடிச்சாங்க.. ஆனா ஒரே ட்ரிக்கால் அத்தனையும் காலி செய்தேன்..! நடிகை அனுபமா ஓபன் டாக்..!