சினிமா உலகில் புதிய படைப்புகள் தொடர்ந்து உருவாகி வரும் நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. நடிகை கவுரி கிஷன் தனது உடல் குறித்து நிருபர் ஒருவர் கேட்ட அநாகரிகமான கேள்விக்கு காட்டமாக பதிலளித்தது, பெண்களின் மரியாதை குறித்து மீண்டும் ஒரு முக்கியமான உரையாடலை உருவாக்கியுள்ளது.
இப்படி இருக்க ‘அதர்ஸ் (Others)’ எனும் புதிய படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ள இந்த படம், மருத்துவ குற்றச்செயல்களை மையமாகக் கொண்ட ஒரு மெடிக்கல் கிரைம் த்ரில்லர் எனக் கூறப்படுகிறது. இதில் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சூழலில் பத்திரிகையாளர் சந்திப்பில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். ஆனால் நிகழ்ச்சியின் போதே எதிர்பாராத முறையில் ஏற்பட்ட ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. என்னவெனில் முந்தைய ஒரு பிரசார நிகழ்வில், ஒரு நிருபர் நடிகை கவுரி கிஷனிடம் “உங்கள் எடை என்ன?” என்ற கேள்வியை கேட்டிருந்தார். அப்போது அவர் அதிர்ச்சியடைந்தாலும், உடனடியாக பதிலளிக்கவில்லை.
ஆனால் அந்த கேள்வி குறித்த கேள்வி மீண்டும் எழுந்தபோது, கவுரி கிஷன் தனது மனநிலையை வெளிப்படையாக வெளிப்படுத்தினார். அவர் கோபத்தில் பேசுகையில், “என்னுடைய உடல் எடையை தெரிந்துகொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அன்று நீங்கள் அந்த கேள்வியை கேட்டபோது அதனை உள்வாங்கிக் கொள்ளவே எனக்கு நேரம் எடுத்தது. அதனால் அப்போது என்னால் எதுவும் பேசமுடியவில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர் உடல் மீதான உரிமை அவருக்கே உண்டு. என்னுடைய உடல், என் சாய்ஸ். நான் குண்டாக இருந்தால் அதில் பிரச்சினை இல்லை. அது என் விருப்பம். நான் குண்டாக இருப்பதும், 80 கிலோ இருப்பதும் எனது சாய்ஸ். நான் என் திறமையைதான் பேசவைப்பேன். என்னை மதிப்பது என் வேலைக்காக இருக்க வேண்டும், என் உடலுக்காக அல்ல.
இதையும் படிங்க: எப்பவுமே விஜய்க்கு நல்லது தான் நினைப்பேன்.. நீங்க அமைதியா இருங்க..!! நடிகர் அஜித் காட்டமான பேச்சு..!!

இப்படத்துக்கும், அந்த கேள்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் நடித்த கதாபாத்திரம் பற்றிக் கேட்கலாம், படம் பற்றி பேசலாம். ஆனால் உடல் பற்றிய கேள்விகள் முற்றிலும் தவறு. நான் இங்கு இருக்கும் அனைத்து ஊடகத்தினரிடமும் கேட்டுக் கொள்கிறேன், உருவகேலியை (body shaming) இயல்பான விஷயமாக ஆக்காதீர்கள். இதே கேள்வியை ஒரு ஆண் நடிகரிடம் கேட்பீர்களா? இது நகைச்சுவை அல்ல. இது மரியாதையின்மைக்கான செயல்” என பதிலளித்து அனைவரையும் வாயடைக்க செய்தார். இந்தச் சம்பவம் நிகழ்ந்ததுடன், அங்கு இருந்த பத்திரிகையாளர்களும் சமூக வலைத்தளப் பயனாளர்களும் கவுரியின் தைரியமான பதிலை பாராட்டினர்.
பலரும் சமூக ஊடகங்களில், “அவர் சொன்னது சரி — பெண்கள் தங்களின் உடலால் மதிப்பிடப்படக்கூடாது” எனக் கருத்துரைத்துள்ளனர். சில பிரபல நடிகைகள், பெண் இயக்குனர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரும் கவுரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகை கவுரி கிஷன் முன்பு ‘96’ திரைப்படத்தில் த்ரிஷாவின் இளமைப் பருவ வேடத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதன் பிறகு மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தனது நடிப்பைத் தொடர்ந்து வருகிறார். இப்போது ‘அதர்ஸ்’ திரைப்படத்தின் மூலம் வேறு விதமான கதாபாத்திரத்தில் அவர் மீண்டும் திரைக்கு வருகிறார். இப்படம் மருத்துவ துறையில் நிகழும் ஊழல்கள், மர்மங்கள் மற்றும் மனஅழுத்தங்களை மையமாகக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய இயக்குனர் அபின் ஹரிஹரனும், “நடிகை கவுரி கிஷனின் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். ஊடகமும் கலைஞரும் ஒருவரை ஒருவர் மரியாதையுடன் அணுக வேண்டும்” என்றார். மொத்தத்தில், கவுரி கிஷன் தன்னுடைய தைரியமான பதிலின் மூலம் உடல் அவமதிப்பை எதிர்த்து ஒரு வலுவான செய்தியை சமூகத்துக்குக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் வெடிகுண்டு மிரட்டல்..!! இன்று நடிகர் அருண் விஜய் வீட்டில்..!! களத்தில் இறங்கிய போலீஸ்..!!