பிரபல யூடியூபராக அறியப்படும் டி.டி.எஃப் வாசன், பைக் சாகசம், பைக்கில் நெடுந்தூர பயணம் செய்வதன் மூலமாக சமூக வலைத்தளங்களிலும் சர்ச்சையில் சிக்கி சமூக ஊடகங்களிலும் பிரபலமான ஒரு பெயராக வலம் வருபவர். ஆனால், சில வருடங்களாகவே அதிவேக பைக் ஓட்டம், பாதுகாப்பு இல்லாத சாலை சாகசங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையிலான செயற்பாடுகள் மூலம், சர்ச்சைகளின் மையமாக மாறியிருந்தார்.
குறிப்பாக கடந்த ஆண்டு, அவர் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கியதுடன், அதன் மூலம் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்தச் செயல்கள் "பொதுப் பாதுகாப்பு விதிமீறலாகவும்", "வாகன ஒழுங்குமுறைகளுக்கு விரோதமாகவும்" அமைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது. இது அவரின் வாகன ஓட்ட வரலாற்றிலும், சமூக ஊடகங்களில் அவரது இயக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து டி.டி.எஃப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உரிமம் ரத்து செய்த போக்குவரத்து துறையின் முடிவை செல்லாது என அறிவிக்க கோரி, அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவில், செய்த தவறுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும், தனது வாழ்வாதாரம் இந்த உரிமையை சார்ந்தது எனவும், அவ்வாறாக மன்னிப்பு அளித்து ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் கொடுத்தால் மீண்டும் அந்த வகையான தவறான நடவடிக்கைகள் செய்ய மாட்டேன் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டி.டி.எஃப் வாசனின் மனுவை தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், "பொதுமக்கள் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடத்தப்பட்ட அதிவேக வாகன ஓட்டம், குற்றப் பதிவுகள் மற்றும் சமூகத்துக்கு விளைவிக்கும் பாதிப்பு ஆகியவற்றை கணக்கில் எடுத்துப் பார்த்த போது, உரிமம் ரத்து செய்தது நீதியான நடவடிக்கையாகவே உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அட 'மதராஸி' பட கதை இதுதானா..! நடிகர் சிவகார்த்திகேயனின் மாஸ் ஹிட் மூவியாக இருக்கும் போலயே..!
மேலும், “வாகனம் ஓட்டும் உரிமை என்பது ஒரு அரசு வழங்கும் சான்றிதழ் மட்டுமல்ல, பொதுநலத்துக்கான பொறுப்புடன் கூடிய உரிமை. அதை தவறாக பயன்படுத்தினால் அதன் விளைவுகளும் கடுமையாகவே இருக்கும்" என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பு, சமூக ஊடகங்களில் தன்னம்பிக்கையுடன் வாகன சாகசங்களை வீடியோவாக வெளியிடும் பல இளைஞர்களுக்கு எச்சரிக்கையாக அமையக்கூடியதாக உள்ளது. ஒருவரின் பிரபலமும், சமூக ஊடக ஆதரவுகளும், சட்டவழியில் தவறுகளை மறைக்க முடியாது என்பதற்கான அடிப்படியாக இந்த தீர்ப்பு பார்க்கப்படுகிறது. மேலும் டி.டி.எஃப் வாசன், தனது யூடியூப் சேனல் மூலமாக பெரும் ரசிகர்களை குவித்திருந்தாலும், அவர் தற்காலிகமாக வாகன ஓட்டம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, அவர் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வாரா அல்லது மாற்றுவழி இருக்கிறதா என்பதை பார்ப்பாரா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஆனாலும் அவரது ரசிகர்கள் மீண்டும் வாசன் பைக்கில் ஏறும் நாளை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: வெற்றிநடை போடும் 'மகா அவதார் நரசிம்மா'..! ரூ.210 கோடிக்கும் மேல் வசூலித்து புதிய சாதனை..!