இந்திய திரைப்பட உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளான தேசிய திரைப்பட விருதுகள், 1954-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம், 2023-ம் ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு வழங்கப்பட்ட 71-வது தேசிய திரைப்பட விருதுகள், நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டது. நாட்டின் பல மொழிகளில் உருவான தரமான திரைப்படங்களை கௌரவிக்கும் இந்த விருதுகள், திரையுலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
இந்த ஆண்டு, சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படமானது '12த் பெயில்' என்ற இந்திப் படம். விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், வாழ்க்கை மற்றும் கனவுகளை மையமாகக் கொண்டு நகரும் ஒரு உணர்வுப் பூர்வமான கதையை சொல்லும் படமாக அமைந்தது. இதனுடன், சிறந்த நடிகருக்கான தேசிய விருது, இந்திப் திரைப்படமான ‘ஜவான்’ படத்தில் நடித்த ஷாருக்கான் மற்றும் '12த் பெயில்' படத்தில் நடித்த விக்ராந்த் மாசே ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இருவரும் தங்கள் நடிப்புத் திறனினால், கடந்த ஆண்டு திரையுலகில் பெரும் கவனம் பெற்றிருந்தனர். இந்த வரிசையில், தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்து வைத்திருக்கும் படம் 'பார்க்கிங்'. இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி, விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளது.

இந்த படம் சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் (எம்.எஸ். பாஸ்கர்) போன்ற பிரிவுகளில் இப்படம் விருதுகளை பெற்றுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர்களாக சோல்ஜர்ஸ் பேக்டரி சினிஷ் ஸ்ரீதரன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். சமூக நெருக்கடிகளை மையமாக வைத்து அமைந்துள்ள 'பார்க்கிங்', குடும்ப உறவுகள், சாசனங்களை மீறாத மனிதர்கள் மற்றும் சிறிய விஷயங்களில் ஏற்படும் பெரும் மன அழுத்தங்களை மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தியுள்ளது. இப்படி இருக்க, 'பார்க்கிங்' படத்தில் தனது தீவிரமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த நடிகர் எம்.எஸ். பாஸ்கர், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: ஹோட்டல் ரூமில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ்..!
இந்த விருது, அவரது பல வருடங்களாக தொடரும் கலைப்பயணத்துக்கு கிடைத்த மிக முக்கியமான அங்கீகாரமாக கருதப்படுகிறது. இது குறித்து இயக்குநர் ராம்குமார், பேசுகையில், "எம்.எஸ். பாஸ்கர் சார்தான் இந்த விருதை பெற சரியானவர். அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் எனக்கு முன்பிருந்தே இருந்தது. இந்தப் படத்தில் அவர் மிகுந்த உழைப்போடு நடித்தார். அவரது கலைபயணத்தில் இருக்கின்ற திறமை, பார்வையாளர்களை உணர்வாக பாதிக்கக் கூடியது. அந்த உழைப்புக்கான பாராட்டாக இந்த தேசிய விருது அவருக்கு கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என தெரிவித்தார். இந்த விருதுகள், தமிழ் சினிமாவின் தரமான படைப்புகளுக்கு கிடைக்கும் அங்கீகாரமாகவும், நவீன இயக்குநர்களின் முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கின்ற விதமாகவும் அமைந்துள்ளது. 'பார்க்கிங்' படத்தின் வெற்றி, வருங்காலத்தில் சமூக கருத்துக்கள் மற்றும் யதார்த்த காட்சிப்படுத்தல்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு வழிகாட்டும் ஒரு பிரதிபலிப்பாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, அண்மையில் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள், 'பார்க்கிங்' படக்குழுவினருக்கும் எம்.எஸ். பாஸ்கருக்கும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்களில் ரசிகர்களும் "பாஸ்கருக்கு கிடைத்த விருதுக்காக அவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பயத்துல ஏதாவது ஆச்சுன்னா கம்பெனி பொறுப்பல்ல..! பீதியை கிளப்பும் 'தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' ட்ரெய்லர்..!