தமிழ் சினிமாவிலும், சின்னத்திரையிலும் தன்னிச்சையான நடிப்பால் கவனம் பெற்ற நடிகை பிரகதி, சமீப காலமாக நடிப்பைத் தாண்டி ஒரு புதிய அடையாளத்தையும் உருவாக்கி வருகிறார். அந்த அடையாளம் தான் பவர்லிப்டிங். பொதுவாக நடிகைகள் என்றால் மெலிந்த உடலமைப்பு, அழகு, ஃபேஷன் என ஒரே கோணத்தில் பார்க்கப்படும் இந்த காலகட்டத்தில், அதற்கு முற்றிலும் மாறாக தன் உடல் வலிமையையும், மன வலிமையையும் உலகுக்கு காட்டியிருக்கிறார் பிரகதி.
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய ஓபன் மற்றும் மாஸ்டர்ஸ் பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று, நான்கு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்த வெற்றி, ஒரு விளையாட்டு சாதனை மட்டுமல்ல, பெண்கள் எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்கள், உடல் குறித்த விமர்சனங்கள், தொழில்சார் கேள்விகள் ஆகிய அனைத்துக்கும் எதிரான ஒரு துணிச்சலான பதிலாகவே பார்க்கப்படுகிறது. இப்படி இருக்க பிரகதி, தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர். அவரது நடிப்பு வாழ்க்கை எளிதானதாக இல்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன்னை மாற்றிக் கொண்டு, தன் திறமையை நிரூபிக்க தொடர்ந்து முயற்சி செய்தவர். இந்த நிலையில், நடிப்பைத் தொடர்ந்து கொண்டே உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் ஜிம் பயிற்சி, ஃபிட்னஸ் என்ற அளவில் தொடங்கிய அவரது பயணம், பின்னர் பவர்லிப்டிங் என்ற கடினமான விளையாட்டுத் துறையில் தீவிரமாக மாறியது. பவர்லிப்டிங் என்பது சாதாரண உடற்பயிற்சி அல்ல. அது உடல் வலிமை மட்டுமல்ல, மன உறுதியும், கட்டுப்பாடும், தன்னம்பிக்கையும் தேவைப்படும் விளையாட்டு. குறிப்பாக பெண்களுக்கு இந்தத் துறையில் நிறைய தடைகள், கேள்விகள், விமர்சனங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. பிரகதி பவர்லிப்டிங்கில் தீவிரமாக ஈடுபட்டதும், சமூக வலைதளங்களில் பலரும், “இவர் இனி படங்களில் நடிக்க மாட்டார் போல” “சினிமாவை விட்டுட்டு ஜிம்மிலேயே இருக்கிறாரே” “நடிப்புக்கு குட்பை சொல்லிட்டார்” என பலவிதமான கருத்துகளைப் பரப்பினர். இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் வெளியான ‘3 ரோஸஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பிரகதி வெளிப்படையாக பேசினார்.
இதையும் படிங்க: விமர்சனம் பண்ணுங்க.. கிசுகிசு-வ கூட சூப்பரா பண்ணுங்க..! ஆனா என்ன பிரயோஜனம் - நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக்..!
‘3 ரோஸஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் பேசும் போது, பிரகதி மிகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும், அதே நேரத்தில் தைரியமாகவும் தனது மனதில் இருந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி அவர், “நான் படங்களை விட்டுவிட்டு பவர்லிப்டிங் செய்தேன் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால், நான் ஒருபோதும் நடிப்பை விடமாட்டேன். இந்தத் துறைதான் எனது அடையாளம். நான் சாப்பிடுவதற்குக் காரணம். அதனால் தான் நான் இறக்கும் வரை நடிப்பைத் தொடர்வேன்” என்றார். இந்த வார்த்தைகள், அவரது நடிப்பின் மீது இருக்கும் காதலையும், தொழில்முறை பற்றுதலையும் வெளிப்படுத்தின.
பிரகதி தனது பேச்சில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் பகிர்ந்தார். அது, ஜிம்மில் அவர் அணியும் உடைகள் குறித்து வந்த விமர்சனங்கள். “ஜிம்மில் நான் போட்ட உடையைப் பார்த்து, ‘இந்த வயதில் இதெல்லாம் தேவையா?’ ‘இப்படி உடை போட வேண்டுமா?’ என்று கேட்டார்கள். அது என்னை ரொம்ப காயப்படுத்தியது.” ஒரு பெண் உடற்பயிற்சி செய்யும் இடத்தில் கூட, அவரது உடை, வயது, தோற்றம் குறித்து கேள்வி எழுப்பப்படுவது, நம் சமூகத்தின் இரட்டை முகத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்த விமர்சனங்களுக்கு பிரகதி அளித்த பதில், விழா மேடையில் பெரும் கைதட்டலை பெற்றது.

அதன்படி “ஜிம்முக்கு அந்த மாதிரியான உடைகளில்தான் போகணும். புடவை அணிந்து ஜிம்மிற்கு செல்ல முடியாது” இந்த ஒரு வரி, பெண்களின் உடை சுதந்திரம் குறித்த விவாதத்தை மீண்டும் சமூகத்தின் முன் கொண்டு வந்தது. உடற்பயிற்சி செய்ய ஏற்ற உடை அணிவது ஒரு அவசியம். அதைக் கூட தவறாகப் பார்க்கும் மனநிலைக்கு எதிராக, பிரகதியின் இந்த பதில் ஒரு உறுதியான குரலாக அமைந்தது. பிரகதி தனது பேச்சின் உச்சத்தில், மிகவும் பெருமையுடன் ஒரு விஷயத்தை கூறினார். அதில் “என்னை டிரோல் செய்தவர்களுக்கு, இந்த நான்கு பதக்கங்கள்தான் என் பதில்.” என்றார். இந்த வார்த்தைகள், ஒரு நடிகையின் தனிப்பட்ட வெற்றியை மட்டுமல்ல; பெண்கள் எதிர்கொள்ளும் விமர்சனங்களுக்கு எதிரான ஒரு சின்னமாகவும் மாறியது.
ஆசிய ஓபன் மற்றும் மாஸ்டர்ஸ் பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் என்பது சர்வதேச அளவில் நடைபெறும் மிக முக்கியமான போட்டி. இதில் பங்கேற்பதே ஒரு பெரிய சாதனை. அதில் நான்கு பதக்கங்கள் வெல்வது என்பது, கடுமையான பயிற்சி, கட்டுப்பாடு, தியாகம் இல்லாமல் சாத்தியமில்லை. பிரகதி இந்த வெற்றிக்காக பல மாதங்கள் கடினமாக பயிற்சி செய்துள்ளார். படப்பிடிப்பு, பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என அனைத்தையும் சமநிலைப்படுத்தி, இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். பிரகதியின் இந்த உரையும், பதக்க வெற்றியும் வெளியானதும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். பிரகதியின் பயணம், பெண்கள் உடல் வலிமை குறித்த சமூக பார்வையை மாற்றும் ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது. பெண்கள் மென்மையானவர்கள், பலவீனமானவர்கள் என்ற பழைய கருத்துக்களை உடைத்து, அவர்கள் வலிமையானவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
பிரகதி ஒரு நடிகை மட்டுமல்ல, தற்போது அவர் ஒரு விளையாட்டு வீராங்கனையும். இந்த இரட்டை அடையாளம், அவரை மற்றவர்களிடமிருந்து தனித்துவமாக காட்டுகிறது. நடிப்பு தான் தனது வாழ்வாதாரம், அடையாளம் என்று கூறிய அவர், அதே நேரத்தில் தனது ஆர்வத்தையும், திறமையையும் பவர்லிப்டிங்கில் நிரூபித்துள்ளார். ஆகவே நடிகை பிரகதியின் இந்த சாதனை, ஒரு செய்தியாக மட்டும் அல்ல.. ஒரு சமூக உரையாடலாக மாறியுள்ளது.

டிரோல்கள், விமர்சனங்கள், தவறான புரிதல்கள் – இவையனைத்திற்கும் அவர் அளித்த பதில், நான்கு பதக்கங்கள். “நான் இறக்கும் வரை நடிப்பைத் தொடர்வேன்” என்ற அவரது வார்த்தைகள், அவரது தொழில்முறை அர்ப்பணிப்பை காட்டுகிறது. “புடவை கட்டிக்கிட்டு ஜிம்முக்கு போக முடியாது” என்ற அவரது பதில், பெண்களின் உடை சுதந்திரத்தை உறுதி செய்கிறது. “இந்த பதக்கங்கள்தான் என் பதில்” என்ற அவரது குரல், டிரோல்களுக்கு எதிரான வெற்றிக் குரலாக ஒலிக்கிறது.
இதையும் படிங்க: ஜெயிலர் - 2ல் காமெடி சூப்பர் ஸ்டார்..! ஒரு வழியாக உண்மையை சொன்ன நடிகர் சந்தானம்..!