தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் வெளியாகும் முன்பே சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கி விடுகின்றன. அந்த வரிசையில் தற்போது அதிகம் பேசப்படும் படமாக மாறியுள்ளது சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படம். படத்தின் அறிவிப்பே வெளியான தருணத்திலிருந்து, அதன் தலைப்பு, நடிகர் தேர்வு, இயக்குநர், கதையின் மையம் என அனைத்தும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, இந்த படம் இந்தி திணிப்பு மற்றும் உரிமைப் போராட்டம் போன்ற சமூக-அரசியல் விஷயங்களை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுவது, விவாதங்களை இன்னும் தீவிரமாக்கியுள்ளது. குறிப்பாக சுதா கொங்கரா என்ற பெயர், தமிழ் சினிமாவில் சமூக கருத்துடன் கூடிய வலுவான கதைகளை சொல்லும் இயக்குநர் என்ற அடையாளத்தை பெற்றுள்ளது. அவர் இயக்கிய முந்தைய படங்கள் அனைத்தும், வெறும் வணிக வெற்றியை மட்டுமல்லாமல், சமூக அளவிலும் விவாதங்களை ஏற்படுத்தியவை. அதனால் தான், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் எந்த புதிய படமும், “இதில் என்ன கருத்து இருக்கப்போகிறது?” என்ற எதிர்பார்ப்புடன் தான் பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன், ஆரம்பத்தில் குடும்ப ரசிகர்களை கவரும் எளிய ஹீரோவாக அறியப்பட்டவர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில், தனது திரைப்படத் தேர்வுகளில் தெளிவான மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். சமூக கருத்து, அரசியல் நிழல், உணர்ச்சிப்பூர்வமான கதைகள், சவாலான கதாபாத்திரங்கள் இவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். ‘பராசக்தி’ படம், அவரது திரைவாழ்க்கையில் இன்னொரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: மாடர்ன் உடையில் மட்டுமல்ல சுடிதாரிலும் ஹாட்டாக இருக்கும் நடிகை திவ்ய பாரதி..!

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து, அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு நடிகரும் தனித்துவமான நடிகர் வட்டத்தை கொண்டவர்கள் என்பதால், கதையில் பல கோணங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார். சமூக கருத்து கொண்ட படங்களில், பின்னணி இசையும் பாடல்களும் மிக முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பாக, உரிமைப் போராட்டம், அடக்குமுறை, எதிர்ப்பு போன்ற விஷயங்களை திரையில் காட்டும்போது, இசை தான் அந்த உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய கருவியாக இருக்கும்.
அதனால், ‘பராசக்தி’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்த எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. படம் குறித்து ஆரம்பத்தில் இருந்து சொல்லப்பட்டு வரும் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்தி திணிப்பை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருவதாகும். இந்தி திணிப்பு என்பது, தமிழ்நாட்டில் நீண்ட காலமாக அரசியல் மற்றும் சமூக விவாதமாக இருந்து வரும் ஒரு விஷயம். இதை திரைக்கதையாக மாற்றுவது என்பது மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் சவாலான விஷயம். அதனால் தான், இந்த படம் குறித்து அரசியல் ரீதியான கவனமும் அதிகமாக உள்ளது. ‘பராசக்தி’ திரைப்படம், அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பொங்கல் வெளியீடு என்றாலே, அது குடும்ப ரசிகர்களை குறிவைத்த வெளியீடு. அதே நேரத்தில், கருத்துள்ள படங்களை பொங்கலுக்கு வெளியிடுவது என்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய தைரியமான முடிவாகவும் பார்க்கப்படுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விழாவில், படத்தின் கருத்து, சமூக நோக்கம் குறித்து இயக்குநரும் நடிகர்களும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், இந்த இசை வெளியீட்டு விழாவே ஒரு பெரிய மேடையாக மாறும் எனவும், அதில் பேசப்படும் விஷயங்கள் அரசியல் மற்றும் சமூக விவாதங்களை உருவாக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான், தற்போது ‘பராசக்தி’ படத்தின் கதை இதுதான் என்று கூறி, ஒரு கதை சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அந்த கதைப்படி, பல ஆண்டுகளுக்கு முன்பு மெட்ராஸில் நடைபெற்ற ஒரு உரிமை மறுப்பு போராட்டம் அந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஒரு அதிகாரி நகரத்திற்கு வருகிறார்.
ஆனால் அந்த போராட்டத்தின் மூலகாரணமாக இருப்பவர், அந்த அதிகாரியின் சொந்த சகோதரர் இந்நிலையில், பாசமா? நீதியா? என்ற மிகப்பெரிய மோதல் உருவாகிறது. அந்த சூழலில், நாயகன் எடுக்கும் முடிவு தான் ‘பராசக்தி’ படத்தின் கதை என்று சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது. இந்த கதை உண்மை என படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், கதை சுதா கொங்கரா பாணியில் இருப்பது இந்தி திணிப்பு, உரிமைப் போராட்டம் போன்ற விஷயங்களுடன் பொருந்துவது சிவகார்த்திகேயனின் சமீபத்திய படத் தேர்வுகளுடன் ஒத்துபோவது போன்ற காரணங்களால், ரசிகர்கள் இந்த கதையை நம்பும் நிலைக்கு சென்றுள்ளனர்.
இந்த கதை வைரலானதிலிருந்து சிலர், “இந்த கதை உண்மை என்றால் படம் வெறித்தனமாக இருக்கும்” என்று விவாதித்து வருகின்றனர். ‘பராசக்தி’ என்ற பெயர், தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய அரசியல் மற்றும் சமூக அடையாளம் கொண்ட பெயர். அந்த பெயரை மீண்டும் பயன்படுத்துவது என்பதே, இந்த படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனால் தான், இந்த படத்தின் கதை, வசனம், காட்சிகள் அனைத்தும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே ‘பராசக்தி’ திரைப்படம், வெளியாகும் முன்பே ஒரு சமூக-அரசியல் விவாதமாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் கதை உண்மையா இல்லையா என்பது தெரியாத நிலையில், அந்த விவாதமே இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இறுதியாக, இந்த கதை உண்மையா? அல்லது முற்றிலும் வேறொரு கதைதானா? என்பதற்கு விடை கிடைப்பது, படம் திரையரங்குகளில் வெளியாகும் ஜனவரி 14 அன்று தான்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு முன்பே 34 குழந்தைகள்..! அனைவரையும் வாயடைக்க செய்த நடிகை..!