தமிழ் திரைப்பட உலகில் இயக்குனராகவும், கதையாசிரியராகவும், பின்னர் நடிகராகவும் தனித்துவமான இடத்தைப் பெற்றவர் ஆர். சுந்தர்ராஜன். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை என்ற தொடரில் ‘அண்ணாமலை’ கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது இளமைக் கால நண்பரும் பிரபல இயக்குனர்-நடிகருமான கே. பாக்யராஜ் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். பல ஆண்டுகளாக மனதில் பதிந்திருந்த வருத்தங்களை அவர் வெளிப்படையாக பகிர்ந்திருப்பது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.
“ஒன்றாம் வகுப்பிலிருந்தே நாங்கள் ஒரே பள்ளியில் படித்தோம். அவன் இவன் என்று உரிமையோடு பேசும் அளவுக்கு இருந்த ஒரே நண்பன் பாக்யராஜ் தான்,” என சுந்தர்ராஜன் நினைவுகூர்கிறார். சிறுவயதிலேயே சினிமா மீது ஈர்ப்பு ஏற்பட்ட இருவரும், ஒரு நாள் இயக்குனர்களாக வேண்டும் என்ற கனவை மனதில் கொண்டு வளர்ந்ததாக அவர் கூறுகிறார்.
“நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரே படத்தை இயக்கப் போகிறோம் என்று நான் மனதில் முடிவு செய்திருந்தேன். அது பற்றி நேரடியாக பேசியதே இல்லை. ஆனால் நம் நட்பு அதற்குத் தகுதியானது என்ற நம்பிக்கை இருந்தது,” என அவர் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: உலகை விட்டு மறைந்த நல்லகண்ணு..! மரியாதையுடன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்..!

இளமைக் காலத்தில் சினிமா வாய்ப்புகளைத் தேடி சென்னை வந்த இருவருக்கும் வாழ்க்கை எளிதாக அமையவில்லை. ஒரு கட்டத்தில் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்துக்கு உதவி இயக்குனர் தேவைப்பட்டதாக கூறப்படுகிறது. “அப்போது என்னைத் தான் ஒருவர் பரிந்துரைத்தார். ஆனால் நான் பாக்யராஜை போகச் சொன்னேன். அவன் நன்றாக ஆங்கிலம் பேசுவான்; அவன் முன்னேறினால் நானும் முன்னேறுவேன் என்று நினைத்தேன்,” என்று சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். அந்த முடிவு தான் பின்னர் அவரின் வாழ்க்கையை மாற்றிய திருப்பமாக அமைந்ததாக அவர் உணர்கிறார்.
பட வாய்ப்புகள் கிடைத்தபின் பாக்யராஜ் விரைவில் முன்னேறத் தொடங்கினார். குறிப்பாக புதிய வார்ப்புகள் படத்தில் ஹீரோவாக நடித்தது அவரது வாழ்க்கையில் பெரிய முன்னேற்றமாக அமைந்தது. “ஒரு இரவு தூங்கினோம். காலை எழுந்து பார்த்தால் அவன் இல்லை. பின்னர் ஒரு கடிதம் வந்தது. ‘ஊருக்கு போய் கடையைப் பார்த்துக்கொள். நான் படம் இயக்கும் போது கூப்பிடுறேன்’ என்று எழுதியிருந்தான்,” என சுந்தர்ராஜன் கூறுகிறார். அந்த கடிதம் தன்னை உலுக்கியதாகவும், உடனே ஒரு ‘இன்லேண்ட்’ கடிதத்தில் ‘நன்றி’ என்று மட்டும் எழுதிப் பதிலளித்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
அந்த வயதில் ஏற்பட்ட மனவருத்தம் மிகுந்ததாக இருந்ததாகவும், “அவன் வாழ்க்கையில் நான் குறுக்கிடுவேன் என்று நினைத்திருக்கலாம். ஆனால் என் வாழ்க்கையே போய்விட்டது என்று அப்போது நான் நினைத்தேன்,” என அவர் வலியுறுத்தினார். இருப்பினும், பாக்யராஜ் இயக்கிய மௌன கீதங்கள் படத்தை திரையரங்கில் பார்த்தபோது, “நான் ஜெயிக்கவில்லை என்றாலும், நம் நண்பன் ஜெயித்துவிட்டான்” என்ற பெருமிதம் மனதில் தோன்றியதாக அவர் கூறியுள்ளார். அந்த உணர்வு அவரின் நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

பின்னர் நடந்த ஒரு சம்பவம் அவரின் மனக்கசப்பை வெளிப்படுத்துகிறது. சென்னை மவுண்ட் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு பென்ஸ் கார் அருகில் வந்து நின்றதாம். அதில் இருந்தவர் பாக்யராஜ். “உன்னை டிராப் செய்கிறேன்” என்று அழைத்தபோதும், சுந்தர்ராஜன் மறுத்துவிட்டதாக கூறுகிறார். “தேனாம்பேட்டையிலாவது விட்டுவிடுகிறேன்” என்றாலும், கோபத்தில் கையில் ஒரு பெரிய கல்லை எடுத்தேன்.
அதன் பிறகு அவன் போய்விட்டான்,” என அவர் பகிர்ந்துள்ளார். “எந்த மவுண்ட் ரோட்டில் நாங்கள் பசியோடு ஒன்றாக நடந்தோமோ, அதே சாலையில் அவன் பென்ஸ் காரில் சென்றான்.. நான் பசியோடு நடந்தேன்” என்ற அவரது வார்த்தைகள், வாழ்க்கையின் மாற்றங்களையும் நட்பின் சிக்கல்களையும் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. சிலர் இதை ஒரு காலத்தின் உணர்ச்சி வெடிப்பாகக் கருதுகின்றனர்.. சிலர் பழைய காயங்களை மீண்டும் திறப்பதாகக் கூறுகின்றனர். இருப்பினும், சுந்தர்ராஜன் பகிர்ந்த நினைவுகள் தமிழ் திரையுலகின் ஒரு முக்கியமான காலப்பகுதியை நினைவூட்டுகின்றன. நட்பு, கனவு, துரோகம், வெற்றி, மனவருத்தம் என இவை அனைத்தும் கலந்த மனித உணர்வுகளின் சித்திரமாக இந்தக் கதை பார்க்கப்படுகிறது.

திரையுலகில் வெற்றி பெற்றவர்களும், பின்னால் நின்று போனவர்களும் இருக்கும் நிலையில், அந்த பயணத்தின் பின்னணியில் உள்ள மனித கதைகள் அரிதாகவே வெளிவருகின்றன. சுந்தர்ராஜனின் இந்த உருக்கமான பகிர்வு, வெற்றியின் ஒளிவட்டத்துக்கு அப்பால் இருக்கும் உண்மைகளை நினைவூட்டுகிறது. நட்பு எவ்வளவு ஆழமானதாக இருந்தாலும், வாழ்க்கையின் திருப்பங்கள் அதை சோதிக்கக்கூடும் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
இதையும் படிங்க: 'தாய்க்கிழவி' படமும் 'ஆழி' படமும் வெற்றி பெறணும்..! அண்ணாமலையாரிடம் ரெக்வஸ்ட் வைத்த சரத்குமார்..!