தென்னிந்திய திரைப்படங்களைத் தாண்டி தற்போது பாலிவுட்டிலும் பிசியாக நடித்து வரும் நடிகை தான் ராஷ்மிகா மந்தனா. இவர் ஒவ்வொரு படத்தில் நடித்து முடித்த பிறகு தவறாமல் சர்ச்சைகள், விமர்சனங்கள், மற்றும் சமூக வலைதளங்களில் டிரோல்களுக்கிடையில் சிக்கி தவிப்பதை தனது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே வைத்துள்ளார். தற்போது நடிகை ராஷ்மிகா நடித்துள்ள புதிய பாலிவுட் படமான ‘தி கேர்ள் பிரண்ட்’ படம் வெளியாகவுள்ள நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி தற்பொழுது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ‘தி கேர்ள் பிரண்ட்’ திரைப்படம் வெளியாகும் முன், ப்ரொமோஷன்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்புகளில் பங்கேற்க தயாராகும் ராஷ்மிகா, சமீபத்தில் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், தன்னைச் சுற்றி ஏற்படும் தவறான புரிதல்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில் " “அனிமல்” திரைப்படம் வெளியானபோது, ரண்பீர் கபூரின் கதாபாத்திரம் பற்றிய கேள்விக்கு, நான் மிகுந்த நேர்மையுடன் என் கருத்தை பகிர்ந்தேன். ஆனால் அந்தக் கருத்துக்களை சில சமூக ஊடகங்கள் முற்றிலும் வேறுவிதமாக சித்தரித்து, என்னை விமர்சனங்களுக்குள் சிக்க செய்து விட்டனர். சில செய்தித் தொலைக்காட்சிகள் முதல் இணையதள ஊடகங்கள் வரை நானே சொல்லாத பல வார்த்தைகளை என் பெயரில் வெளியிட்டு, அதை சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனால் எனக்கு சொல்லமுடியாத வகையில் மனவேதனை ஏற்பட்டது தெரியுமா.. நான் சாதாரணமாக, என்ன உணர்ந்தேனோ அதை நேர்மையாக தானே சொல்லுகிறேன். ஆனால் அதை விமர்சன கண்ணோட்டத்திலோ, அல்லது வேறுமாதிரியான கருத்தாகவோ மாற்றி சமூக வலைதளங்களில் டிரோலாக மாற்றுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், எனது கருத்துகளை வேறுவிதமாக இந்த உலகிற்கு காண்பிக்க முயற்சிக்கிறார்கள். பல சமயங்களில், நான் சொன்னதை விட நான் சொல்லாத வார்த்தைகளையும் சொந்தமாக உருவாக்கி அந்த கருத்துக்களையும் சேர்த்து வெளியிட்டு என்னை விமர்சிக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் மத்தியில் என்னுடைய நற்பெயர் மிகவும் பாதிக்கப்படுகிறது.

ஒரு நடிகை என்பதற்கும் மேலாக, ஒரு பெண்ணாக இது எனக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்று தனது வருத்தத்தை வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார் ராஷ்மிகா. பின்பு மேலும் பேசிய அவர், இந்த மோசமான விமர்சன அனுபவங்களுக்குப் பிறகு, தற்போது முக்கியமான முடிவொன்றை எடுத்துள்ளதாக பேசினார். அதன்படி அவர் பேசுகையில், "இனி நான் எந்த பேசும் பொழுதும் கருத்துகளை வெளிப்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படப் போகிறேன். இது ஊடகங்களிடம் இருந்து விலகி இருப்பதற்காக அல்ல, ஆனால் என் சொந்த கருத்துக்களால் யாருக்கும் தவறான புரிதலோ தாக்கங்களோ ஏற்படக்கூடாது என்பதற்காகவே.
இதையும் படிங்க: நடிகை ராஷ்மிகா மந்தனா 'அனிமல்' ஹீரோவை காதலிக்க தயாராம்..! நேஷனல் கிரஷை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
எனது பேச்சுகளால் சமூகத்தில் தவறான கருத்துக்கள் உருவாகக்கூடாது என்பதே என் முழு விருப்பம். விமர்சனங்களைத் தூண்டும் வகையில் எதையும் இனி பேச விரும்பவில்லை.. பேசவும் மாட்டேன். மக்கள் என் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை காத்து கொள்வது எனது மிகப்பெரிய கடமையாக பார்க்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். இப்படி இருக்க, நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த திரைப்படமான ‘தி கேர்ள் பிரண்ட்’, பெண்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான அழகிய காதல் கதையாக பார்க்கப்படுகிறது. இதில் ராஷ்மிகா ஒரு ஸ்ட்ராங்கான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஹிந்தியில் இவர் முந்தைய படமான ‘அனிமல்’ மூலம் பெரிய அளவில் பலரது கவனத்தையும் பெற்றிருந்த நிலையில், இந்த படம் மீது மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. மேலும், அவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் தொடர்ந்து பிஸியாக உள்ளார். இப்படி இருக்க, இந்த கால கட்டத்தில், பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவுவதால், அவை பன்மடங்கு அதிகமாக விமர்சிக்கப்படுகின்றன.

குறிப்பாக, அவர்களின் கருத்துக்களை சில ஊடகங்கள் தவறாக சித்தரித்து காண்பிப்பதால் மக்கள் மத்தியில் அவர்கள் மேல் தவறான புரிதல்களும் ஏற்படுகின்றன. இந்தசூழலில் தற்பொழுது ராஷ்மிகா எடுத்துள்ள இந்த முடிவு, அவரது வேதனையை வெளிக்காட்டுவதாக உள்ளது. எனவே, ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் வெளியீடு எதிர்பார்க்கப்படுவதுடன், ராஷ்மிகா தனது புதிய அணுகுமுறையில் ஊடகங்களுக்கு பதிலளிப்பதை இனி வரும் காலங்களில் சரியான முறையில் பின்பற்றுவார் என்பது தெளிவாகிறது.
இதையும் படிங்க: உங்கள நான் படம் பாக்க சொன்னனா.. இஷ்டம் இருந்தா பாருங்க..! நடிகை ராஷ்மிகா பேச்சால் பரபரப்பு..!