தமிழ் சினிமாவில் கிராமிய கதைகளை அழகாக பிரதிபலிக்க செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விமல். தனது நடிப்பின் இயல்புத்தன்மையால், நகர மற்றும் கிராம வாசிகளின் வாழ்வியல், பண்பாட்டின் நுணுக்கங்களை வெற்றிகரமாகச் சித்தரித்து வந்துள்ள இவர், தற்போது புதிய ஒரு கதையை ஸ்கிரீனுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறார். அந்தப் புதிய முயற்சியே ‘வடம்’ எனும் திரைப்படம். இந்தப் படம் ஜல்லிக்கட்டின் ஒரு வகையை மையமாகக் கொண்ட திரைப்படமாக உருவாகிறது. இந்தப் புதிய முயற்சிக்கான தொடக்க விழா, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது.
இத்திரைப்படத் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர், இயக்குனர் கேந்திரன், நடிகர் விமல், கதாநாயகியாக நடிக்கவுள்ள சங்கீதா, மற்றும் படத்தின் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்றனர். மூலஸ்தானத்தில் சாமி தரிசனம் செய்து, படத்தின் வெற்றிக்காக அருளாசி பெற்றவர்கள், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் படத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். பூஜையுடன் தொடங்கிய படம் என்பதால், அதைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படி இருக்க தொடக்க விழாவின் பிறகு, செய்தியாலாளர்களை சந்தித்த நடிகர் விமல், 'வடம்' திரைப்படம் பற்றிய முக்கியமான தகவல்களை பகிர்ந்தார்.

அவர் கூறுகையில், " ஜல்லிக்கட்டில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, மாடுகளை துரத்திச் சென்று பிடிக்கும் முறை. மற்றொன்று, மாடுகளுக்கு கயிறு கட்டி, சுற்றி நின்று பிடிக்கும் முறை. அந்த இரண்டாவது முறைதான் ‘வடம்’ என அழைக்கப்படுகிறது. இவ்வகை மாடுபிடி போட்டி, இன்று பெரிய அளவில் பேசப்படாமல் மறைக்கப்பட்டு வருகிறது. இதை மையமாகக் கொண்டு தான் இந்தப் படம் உருவாகிறது. இந்த படம், வெறும் ஒரு ஸ்போர்ட்ஸ் ஃபிலிம் அல்ல. ஜல்லிக்கட்டின் நம்பிக்கைகள், சமூக பிணைப்பு, வீரச்சின்னங்கள என அனைத்தையும் பிரதிபலிக்க கூடிய படம். இது உணர்வுகள் நிறைந்த படம். அதே சமயம், பார்வையாளர்களுக்கு பிடிக்கும் வகையில் ஆக்ஷனும், ரொமான்சும் நிச்சயமாக இருக்கும். மக்கள் ஜல்லிக்கட்டின் உண்மை பெருமையை அறிய வேண்டும். அதற்காகத்தான் இந்த முயற்சி" என தெரிவித்தார். இதன் மூலமாக தான் நடிக்கும் படம், வெறும் ஆக்ஷன், விளையாட்டு என்ற வகையிலேயே இல்லாமல், மரபு, கலாசாரம் மற்றும் நாட்டு மக்கள் பற்றிய அனைத்து மரபுகளையும் கொண்டு உருவாகும் என்பதை விமல் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: வெறித்தனமான திரில்லர் அனுபவம்..! ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தும் "சரண்டர்"..!
ஆகவே இந்த ‘வடம்’ திரைப்படம், ஜல்லிக்கட்டு பற்றிய புரிதலையும், அந்த நிகழ்வின் பின்னணியில் ஒளிந்திருக்கும் மனிதர்களின் வாழ்வையும் திரையரங்கில் உணரச்செய்யும் வகையில் அமையும் என படக்குழு உறுதி தெரிவித்துள்ளது. ‘வடம்’ திரைப்படத்தை தயாரிப்பாளர் ராஜசேகர் தயாரிக்கிறார். கதையை இயக்குனர் கேந்திரன் இயக்குகிறார், கிராமிய கதைகளை பதிவு செய்யும் தனிப்பட்ட பாணியில் சிறந்தவராக இவர் அறியப்படுவதால் மகிழ்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள். மேலும் நடிகை சங்கீதா, படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடைய நடிப்பு, இந்த கிராமிய சூழ்நிலையை அழுத்தமாகப் பதிவு செய்யும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து படத்தின் இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் போன்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியலும் விரைவில் வெளியிடப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு அல்ல, அது நம் பண்பாட்டு அடையாளம். ‘வடம்’ திரைப்படம், அந்த அடையாளத்தில் மறைந்திருக்கும் பரிமாணங்களை மிக நுட்பமாகத் தொட்டுப் பார்ப்பதாக உள்ளது.

ஆகவே பூமியோடு பிணைந்த கதைகளை பரிமாறும் நடிகர் விமலின் அடுத்த முயற்சி என்பதால், இப்படம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்..! நடிகர் சாந்தனுவை கண்ட பக்தர்கள் உற்சாகம்..!