இலங்கையில் இருந்து தமிழகத்தை தேடி வரும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறையை சொல்லும் சிறந்த படமாக இருப்பது தான் டூரிஸ்ட் ஃபேமிலி படம். இந்த படத்தை பார்த்து விட்டு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரனின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் முரளி என்ற கேரக்டரில் வரும் கமகேஷுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

24 வயதே ஆன இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது முழு திறமையையும் இப்படத்தில் காண்பித்துள்ளார் என்றே சொல்லலாம். இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாக எடுத்து மக்கள் மத்தியில் கொண்டு சென்ற அவருக்கு இலங்கை தமிழ் மக்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெறிவித்து வருகின்றனர். படம் வந்ததிலிருந்து பலரது பாராட்டுகளை மட்டுமே பெற்று வரும் நிலையில் படத்தை குறித்து பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ரெட்ரோ'வை விஞ்சிய 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம்.. காட்சிகள் அதிகரிப்பால் படக்குழு குஷி.!!

அதன்படி, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படத்தை குறித்து சமுத்திர கனி பேசியது தான் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் பேசுகையில், "இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்படமாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை கூறுவேன்.

உண்மையிலேயே இந்த படம் மிகவும் அருமையாகவும் மகிழ்விக்கும் வகையிலும் பெருமையாகவும் இருந்தது. இந்த படத்தை பார்ப்பவர்கள் கண்டிப்பாக இலங்கை தமிழர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றே சொல்வர். சசிகுமாருக்கு எப்படி சுப்பிரமணியபுரமோ, எனக்கு எப்படி நாடோடிகளோ அந்த வகையில் உங்களுக்கு தான் இந்த படம். இதனை உங்களால் வெல்லவே முடியாது. இந்த படம் அறத்தை பற்றி சொல்லும் படம், அன்பு அதிகமாக கொடுக்கும் படம், அதுமட்டுமல்லாமல் நேர்மையான படம்" என புகழ்ந்து தள்ளினார்.

இவரை தொடர்ந்து, தற்பொழுது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கும் இயல்புடைய நான் இன்று மதியம் குடும்பத்தினருடன் சென்று டூரிஸ்ட் ஃபேமிலி படம் பார்த்தேன். இந்த படம் என் மனதை மிகவும் ஈர்த்தது. இப்பொழுது இருக்கும் காலக்கட்டத்தில் அக்கம் பக்கத்தினருடன் மக்கள் பேசி பழகும் நடைமுறை முழுவதுமாக குறைந்து உள்ள நிலையில், வீடுகளில் தங்கள் அருகில் வசிப்பவருடனும் மனிதாபிமான உறவோடும் அன்புடனும் வாழும் வாழ்க்கையை மக்களுக்கு தெளிவாக போதிக்கிறது இப்படம்.

படத்தின் கதாநாயகன் சசிகுமார், படத்தில் உதவும் நல்ல உள்ளதோடு இருக்கும் வகையில் நடிக்காமல் வாழ்ந்து இருக்கிறார். அதுதான் இந்த படத்தின் வெற்றி. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக்காட்டும் அற்புதமான படம். ஆதலால் இப்படத்தின் இயக்குனரையும் நடிகர்களையும் தொலைபேசி வாயிலாக அழைத்து எனது பாராட்டுகளை தெரிவித்தேன்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹிட் கொடுத்த டூரிஸ்ட் ஃபேமிலி படம்..! ஒரே நாள் வசூலில் சாதனை..!