தமிழ் திரைப்பட இசையின் 'மாஸ்ட்ரோ' என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா, தனது பழைய பாடல்களை உரிய அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்தியதாக அமெரிக்காவைச் சேர்ந்த எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் மற்றும் இந்தியாவின் ஓரியண்டல் ரெக்கார்டிங் நிறுவனங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு, இசைத் துறையில் பதிப்புரிமை (காப்புரிமை) உரிமைகள் குறித்து புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.

இளையராஜா, 1970-களில் இருந்து 4,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவர். அவரது இசை, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் பிரபலமானது. 1980-களில் வெளியான 20 தமிழ்ப் படங்கள் உள்ளிட்ட 30 படங்களின் இசை உரிமைகளைப் படத் தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்றதாக அவர் கூறுகிறார். இருப்பினும், எக்கோ மற்றும் ஓரியண்டல் நிறுவனங்கள் இந்தப் பாடல்களை 'விலைக்கு வாங்கிய' உரிமையாளர்கள் என்று வாதிடுகின்றன.
இதையும் படிங்க: இளையராஜா சாங்ஸ் எல்லாம் கட்.. மீண்டும் மாஸாக ஓடிடியில் வந்த ‘குட் பேட் அக்லி’..!
பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், பல்வேறு இசை நிறுவனங்கள் ஆகியவை தனது பாடலை அனுமதியில்லாமல் பயன்படுத்தி வருவதாகவும் இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்றும், குறிப்பாக சோனி நிறுவனம் மற்றும் அதன் சமூக வலைதள பக்கங்களில் என்னுடைய பாடல்களை மாற்றியும் பயன்படுத்தி தன்னுடைய அனுமதி இல்லாமல் பல்வேறு வடிவங்களில் அதனை மாற்றி பயன்படுத்தி வருவதாக இளையராஜா தெரிவித்தார்.
மேலும் சோனி நிறுவனம் எக்கோ நிறுவனத்திடம் இருந்து பாடல்களை வாங்கியதாக கூறினாலும், அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவுள்ளதாகவும் அந்த உத்தரவை மதிக்காமல் அதனை சார்ந்த நிறுவனங்கள் தன்னுடைய பாடல் படைப்புகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி, இளையராஜா இசையை பயன்படுத்தி ஈட்டிய வருமானம் எவ்வளவு என்பது குறித்த வரவு செலவு விவரங்களை தாக்கல் செய்யுமாறு சோனி நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

மேலும் சோனி, எக்கோவிடம் பாடல் உரிமைகளை வாங்கினாலும் அதை பயன்படுத்த தடை விதித்தும், இந்த வழக்கை அக்டோபர் 22 ஆம் தேதி ஒத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். இதனிடையே காப்புரிமை சட்டப்படி தனது இசைப்படைப்புகளுக்கு நானே உரிமையாளர், அதற்கு உரிமை கோர யாருக்கும் அதிகாரமில்லை என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “GBU” தயாரிப்பு நிறுவனத்திற்கு பறந்த நோட்டீஸ்.. இளையராஜா வைத்த செக்..!!