கேரள மாநிலம் கொச்சியில் ஐ.டி. ஊழியர் ஒருவரை கடத்தி தாக்கிய வழக்கில் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை லட்சுமி மேனன் மீது எர்ணாகுளம் நார்த் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 24ம் தேதி இரவு எர்ணாகுளம் நார்த் ரயில்வே மேம்பாலத்தில் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மிதுன், அனீஷ் மற்றும் சோனமோல் ஆகிய மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர், ஆனால் லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை கூறுகிறது.

அலுவா பகுதியைச் சேர்ந்த அலியார் ஷா சலீம் என்பவர் அளித்த புகாரின் படி, கொச்சியில் உள்ள ஒரு மதுக்கூடத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு இந்த சம்பவத்திற்கு காரணமாகும். இந்த மோதலின் போது லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் அடங்கிய குழு, புகார்தாரரின் காரை மறித்து, அவரை வலுக்கட்டாயமாக இழுத்து மற்றொரு வாகனத்தில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இளம்பெண் மருத்துவரின் பாலியல் புகார்.. ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரளா ஐகோர்ட்..!!
பாதிக்கப்பட்டவர் முகத்திலும் உடலிலும் காயம் ஏற்பட்டதாகவும், லட்சுமி மேனன் தனது கைபேசியை பறித்து வசைபாடியதாகவும் புகார் கூறியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ ஆதாரங்கள் காவல்துறையிடம் உள்ளதாகவும், அவை லட்சுமி மேனனின் ஈடுபாட்டை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சுமி மேனன், தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பிரபலமானவர். 2011இல் 'ரகுவிந்தே ஸ்வந்தம் ராஸியா' என்ற மலையாள படத்தில் அறிமுகமான இவர், 'சுந்தரபாண்டியன்', 'கும்கி', 'ஜிகர்தண்டா', 'வேதாளம்' உள்ளிட்ட படங்களில் நடித்து, பிலிம்பேர், தமிழ்நாடு மாநில விருது மற்றும் இரண்டு சீமா விருதுகளை வென்றவர். தற்போது இந்த வழக்கு காரணமாக அவரது திரை வாழ்க்கை சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்நிலையில் ஐடி ஊழியர் ஒருவரை கடத்தி தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனனுக்கு கேரள உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. லட்சுமி மேனன் முன்ஜாமின் கோரி கேரள உயர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை விசாரித்து, செப்டம்பர் 17 வரை லட்சுமி மேனனை கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும், கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவரான சோனமோல், எதிர்க்குழுவில் ஒருவர் மீது புகார் அளித்ததை அடுத்து, அவருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இளம்பெண் மருத்துவரின் பாலியல் புகார்.. ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரளா ஐகோர்ட்..!!