பரியேறும் பெருமாள், ரஜினி முருகன், காலா, ஜெய் பீம், பிசாசு, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரபல காமெடி நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சினிமாவில் இருந்த இவர், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் சூப்பர் குட் சுப்பிரமணி என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

புற்றுநோய் பாதிப்பில் 4-வது கட்டத்தை எட்டி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சுப்பிரமணி. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அவருக்குப் பண உதவி தேவை என்றும் குடும்பத்தினர் சமீபத்தில் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று நடிகர் கார்த்தி அவரது குழந்தைகளின் படிப்புச்செலவை ஏற்பதாக தெரிவித்தார். மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், சிம்பு, சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் பணம் உதவி செய்தனர்.
இதையும் படிங்க: களமிறங்கும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா..! ஜெயிலர் 2-வில் காத்திருக்கும் ட்விஸ்ட்..!
இந்த நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் இன்று காலமானார். இவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான தேனி மாவட்டம் வடுக்கப்பட்டியில் நாளை மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில், “என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை மாலை நடைபெறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரே நாளில் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது தமிழ் திரைஉலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கும் விஜய் மகன்..! ஜேசன் சஞ்சய் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா..!