பிரபல விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் சமூகத்துக்கு தொடர்பான முக்கியமான தலைப்புகளை எடுத்து வைத்து, இரு தரப்பாக பிரித்து விவாதம் நடத்துவது இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும். தொகுப்பாளர் கோபிநாத்தின் சிந்தனைத் தூண்டும் கேள்விகளும், நேர்மையான நடுவர் பங்கும், நகைச்சுவை கலந்த பேச்சும் நிகழ்ச்சியை மேலும் ஈர்க்கக்கூடியதாக மாற்றுகின்றன.

அந்த வகையில் இந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடு, சமீபத்தில் அதிகமாக பேசப்படும் தெரு நாய்கள் பிரச்சனை குறித்த விவாதமாக இருந்தது. நாய்களை பாதுகாக்க வேண்டும் என்று ஆதரித்தவர்களும், அவை சமூகத்திற்கு ஆபத்தானவை என்பதால் கட்டுப்படுத்த வேண்டும் என்று எதிர்த்தவர்களும் தங்கள் தரப்பில் வலுவான வாதங்களை முன்வைத்தனர்.
இதையும் படிங்க: இனி என் கம்பெனியில் படம் தயாரிக்க மாட்டோம்.. குண்டை தூக்கிப்போட்ட இயக்குநர் வெற்றிமாறன்..!!
நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகும் தருணத்திலேயே சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் கிளம்பின. நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு அதில் சிலர் கூறிய கருத்துகள் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், அதை எதிர்த்து சமூக ஊடகங்களில் விமர்சனங்களும் மீம்ஸ்களும் காட்டுத்தீ போல் பரவின.
மேலும் இந்த விவாதத்தின் ப்ரோமோவில், நடிகை அம்மு உள்ளிட்ட சிலர் தெருநாய்களை ஆதரித்து பேசியபோது, ஒரு பங்கேற்பாளரை “நாய் போல குரைக்கச் சொல்லி” சிரிப்பை வரவழைத்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது இந்தக் காட்சிகள் எடிட் செய்யப்பட்டு நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், “உண்மையான உரையாடல்களை மறைக்கின்றனர்” என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
https://www.instagram.com/p/DODZB6Dk_H6/?utm_source=ig_web_copy_link
இந்நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாய்களுக்கு ஆதரவாகப் பேசிய நடிகர் படவா கோபியின் கருத்துகள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அவர் அதற்கு மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். தனது பேச்சுக்கு எழுந்த கடும் எதிர்ப்பையடுத்து படவா கோபி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், 'நீங்கள் எல்லோரும் பார்த்தது எடிட் செய்யப்பட்ட எபிசோடு. அப்படி போடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பொது மக்கள் யாரும் என்னை தவறாக நினைத்துவிடாதீர்கள். நான் பேசியது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல. என்னுடைய கருத்துகள் அப்படிப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால், அதற்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

கோபிநாத் இந்த விவாதத்தில், “தெருநாய்களுக்கு சரணாலயம் வேண்டும் என்று கோருவது சரி, ஆனால் என் குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பியது பலரால் ஆதரிக்கப்பட்டது. இருப்பினும், நிகழ்ச்சியில் உண்மையான உரையாடல்கள் மறைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள், நீயா நானா நிகழ்ச்சியின் நம்பகத்தன்மை குறித்து விவாதத்தை தூண்டியுள்ளது. இந்த சர்ச்சை, நிகழ்ச்சியின் எதிர்கால ஒளிபரப்பு மற்றும் பார்வையாளர்களின் நம்பிக்கையை பாதிக்குமா என்பது குறித்து பரவலான கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: நடிகை ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த கூலி மெமரிஸ்..! கலக்கல் போட்டோஸ் இதோ..!