இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (SBI) ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் தரவுகள் தற்போது இணையத்தில், அதாவது ‘டார்க் வெப்’ எனப்படும் நிழல் இணையத்தில் இலவசமாகப் பதிவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹேக்கர்கள் இந்தத் தரவுகளைத் திருடி இணையத்தில் பதிவேற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தத் தரவுகளை யார் வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்தக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்டேட் வங்கி இரண்டு முக்கிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ‘Customer Safety and Awareness – Important Update’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், யாருடைய தரவுகள் கசிந்துள்ளனவோ அவர்களுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தங்கம் விலை உயர்வு..!! வெள்ளி விலை குறைவு..!! இன்றைய நிலவரம் என்ன..??
அதேபோல், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் திருடப்படவில்லை என்றும், அவர்களது கணக்குகளில் உள்ள பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும் வங்கி குறிப்பிட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் கணக்கு இருப்புத் தொகையும் நிதிச் சேவைகளும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மூன்றாவதாக, வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தங்களது OTP, PIN, கடவுச்சொல் உள்ளிட்ட ரகசியத் தகவல்களை யாரிடமும் பகிரக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது. சந்தேகத்திற்குரிய தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இது மிகவும் முக்கியமான எச்சரிக்கையாகும். ஏனெனில், சைபர் குற்றத் தடுப்பு நிபுணர்களிடம் பேசியபோது அவர்கள் தெரிவித்த கருத்துகள் கவனிக்கத்தக்கவை. எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளராக நீங்கள் இருந்தால், உங்கள் தரவுகள் கசிந்திருந்தாலும் கசியாமல் இருந்தாலும், உடனடியாக நான்கு முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இல்லையெனில், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழக்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் சுமார் 23,321 கிளைகளையும், 29 நாடுகளில் 245 கிளைகளையும் கொண்டுள்ளது. மேலும், 63,580 ஏடிஎம்களையும் இயக்கி வருகிறது. இவ்வளவு பெரிய வங்கியின் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.
தற்போது, சுமார் 3,897 பேரின் தரவுகள் கசிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தரவுகள் டார்க் வெப்பில் பதிவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
முதலாவது: கடவுச்சொல் மற்றும் PIN-ஐ மாற்றுங்கள்:
உங்களது தரவுகள் கசிந்துள்ளதா என்பது தெரியாவிட்டாலும், எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது டிஜிட்டல் வங்கிச் செயலிக்குள் சென்று கடவுச்சொல், உள்நுழைவுக்கான PIN உள்ளிட்ட பாதுகாப்பு விவரங்களை மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏற்கெனவே பயன்படுத்தி வரும் கடவுச்சொற்களைத் தொடர்ந்து பயன்படுத்தாமல், வலுவான புதிய கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது நல்லது.
2வது - ஏமாற்று பேர் வழிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்:
தற்போது வாடிக்கையாளர்களின் பெயர், செல்பேசி எண், KYC விவரங்கள், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, கடன் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் கசிந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் உங்களைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.
“நாங்கள் எஸ்பிஐ வங்கியிலிருந்து பேசுகிறோம்”, “நான் வங்கி மேலாளர் பேசுகிறேன்” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, உங்கள் பெயர், வங்கிக் கணக்கு விவரங்கள், கடன் விவரங்கள், மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களைச் சரியாகக் கூறலாம்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் அவர்களுக்குத் தெரிந்திருப்பதால், உண்மையிலேயே வங்கியிலிருந்து அழைப்பு வந்துள்ளதாக நீங்கள் நம்புவதற்கான வாய்ப்பு அதிகம். பின்னர், “உங்கள் கணக்கைப் பாதுகாக்க வேண்டும்”, “உங்களுக்கு வந்துள்ள OTP-ஐச் சொல்லுங்கள்” என்று கேட்கலாம்.
அப்போது, அவர்களை நம்பி OTP அல்லது கடவுச்சொல்லைப் பகிர்ந்தால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழக்க நேரிடலாம். எனவே, யாராக இருந்தாலும் தொலைபேசி அழைப்பில் OTP, PIN அல்லது கடவுச்சொல்லைப் பகிர வேண்டாம். வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறுபவர்களிடமும் இந்த விவரங்களை வழங்கக் கூடாது.
3வது - உங்கள் வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை கவனியுங்கள்:
அடுத்த சில வாரங்களுக்கு உங்கள் வங்கிக் கணக்கில் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளை அடிக்கடி சரிபார்ப்பது அவசியம். நீங்கள் மேற்கொண்ட பரிவர்த்தனைகள் மட்டுமே கணக்கில் இடம்பெற்றுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்குத் தெரியாமல் ஏதேனும் பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருந்தால், அது ஒரு ரூபாயாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாதீர்கள். உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு புகார் அளியுங்கள். சிறிய தொகைதானே என்று விட்டுவிடாமல், சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை உடனுக்குடன் தெரிவிப்பது முக்கியம்.
4வது - வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறுபவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துங்கள்:
அடுத்த சில மாதங்களுக்கு எஸ்பிஐ வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி யாரேனும் உங்களைத் தொடர்புகொண்டால், அவர்களை உடனடியாக நம்பிவிடாதீர்கள். உங்கள் கணக்கு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், வங்கியின் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் சரிபார்த்துக்கொள்ளுங்கள் அல்லது நேரடியாக வங்கிக் கிளைக்குச் சென்று விளக்கம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
வங்கிக் கிளைக்குச் சென்றாலும், உங்கள் OTP, PIN, கடவுச்சொல் போன்ற ரகசியத் தகவல்களை யாரிடமும் பகிர வேண்டியதில்லை. குறிப்பாக, தொலைபேசி அழைப்பில் இத்தகைய தகவல்களைக் கேட்பவர்களிடம் அவற்றை வழங்கவேண்டாம்.
இந்த எச்சரிக்கைகள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். இருப்பினும், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தற்போது வெளியாகியுள்ள தரவுக் கசிவு தொடர்பான தகவல்களைக் கருத்தில் கொண்டு கூடுதல் விழிப்புடன் இருப்பது அவசியம்.
நாம் ஒவ்வொருவரும் கடினமாக உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தைச் சேமிப்பாக வங்கிகளில் வைத்திருக்கிறோம். யாரோ ஒருவர் செய்த குற்றத்திற்காக நாம் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? எனவே, நமது பணத்தைப் பாதுகாப்பதில் நாமும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
சைபர் குற்றவாளிகள் பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்ற முயற்சிப்பார்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களைப் போலவும், உங்களுக்குப் புரியும் மொழியில் சரளமாகப் பேசுபவர்களாகவும், வங்கி அதிகாரிகளைப் போலவும் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளலாம். அவர்களிடம் உங்கள் தரவுகள் இருப்பதால், அவர்கள் கூறும் தகவல்கள் உண்மையாகத் தோன்றலாம். அதனால் ஏமாற்று வலையில் சிக்கிவிடாதீர்கள்.
இந்தத் தகவல்கள் கசிவதற்கு முன்பே பலர் சைபர் மோசடிகளில் சிக்கிப் பணத்தை இழந்துள்ளனர். தற்போது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் குற்றவாளிகளின் கைகளுக்குச் சென்றிருக்கக்கூடும் என்ற அச்சம் இருப்பதால், கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இதையும் படிங்க: அடிதூள்..!! தங்கம் விலை தாறுமாறு குறைவு..!! இன்றைய நிலவரம் என்ன..??