சிக்கன், பீட்சா, பர்கர், நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களோடு சேர்த்து சாப்பிடப்படும், வேகவைக்காத முட்டையின் வெள்ளைக் கருவிலிருந்து தயாரிக்கப்படும் “மயோனிஸ்” பயன்பாட்டுக்கு தமிழக அரசு ஓர் ஆண்டு தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு கடந்த 8ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது என்றாலும், கடைகளிலும், உணவுகங்களிலும், துரித உணவகங்களிலும் மயோனிஸ் பயன்பாடு தடையின்றி இருக்கிறது.

மக்களின் பொது சுகாதாரம் கருதி மயோனிஸ் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. வேகவைக்காத முட்டையின் வெள்ளைக் கருவில் இருந்து தயாரிக்கப்படும் மயோனிஸ், அதிகமான உடல் உபாதைகளை வரவழைக்கும் என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Summer: கோடை வெயிலிருந்து தப்பிக்க உதவும் பழங்கள்.. இதோ லிஸ்ட்.!
தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு முதன்மை செயலர் மற்றும் ஆணையவர் ஆர். லால்வீணா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:
வேகவைக்காத முட்டையின் வெள்ளைக் கருவில் இருந்து தயாரிக்கப்படும் மயோனிஸ் தயாரிப்பது, வைத்திருப்பது, பேக்கேஜ் செய்வது, சேமித்துவைத்திருப்பது, ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வது, உணவுகளில் பரிமாறுவது, கேட்டரிங் சேவையில் பயன்படுத்துவது, விற்பனை செய்வது, ஆகியவை உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006, பிரிவு 30(2)(ஏ)கீழ் குற்றமாகும்.

முட்டையின் வெள்ளைக் கரு, காய்கறி சமையல்எண்ணெய், வினிகர், உள்ளிட்ட சில பொருட்களைக் கலந்து மயோனிஸ் தயாரிக்கப்படுகிறது. இந்த மயோனிஸ் ஷவர்மா உள்ளிட்ட துரித உணவுப்பொருட்களை சாப்பிடுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. வேகவைக்காத முட்டையில் இருந்து தயாரிக்கப்படுவதால், உணவு நஞ்சாகவும், குறிப்பாக சல்மோநெல்லா பாக்டீரியா, சல்மோநெல்லா டைபிம்முரியம், சல்மோநெல்லா என்டரிடிடிஸ், எஸ்சர்சியா கோலை, லிஸ்டிரியா மோனோசைட்டோஜென்ஸ் ஆகியவற்றால் உணவு நஞ்சாகலாம், பக்கவிளைவுகள் வரலாம்.
ஏராளமான உணவுகங்கள் வேகவைக்காத முட்டையில் இருந்து சுயமாகவே மயோனிஸ் தயாரிப்பது தெரியவந்தது, சில சேர்த்து பதப்படுத்தி வைத்துள்ளனர். இதில் மயோனிஸ் கெட்டுப்போய்விட்டால், நுண்கிருமிகள் உருவாகி மனித உடலுக்கு மிகப்பெரிய கேடுவிளைவிக்கும்.

கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மனித உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பொது சுகாதார நலன் கருதி, உணவு ஆணையம் அல்லது மத்திய அரசு அல்லது மாநில அரசு தடைசெய்த எந்தவொரு உணவையும் எந்தவொரு உணவு வணிக நிறுவனமும் தயாரிக்கவோ, சேமிக்கவோ, விற்கவோ கூடாது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.