பிரான்ஸ் முழுவதும் கல்லூரி சேர்க்கை நடைமுறைகளில் ஏற்பட்ட குழப்பம், பள்ளிகளுக்கான நிதிப் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த போராட்டங்கள் பெரும் கலவரமாக வெடித்த நிலையில், அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு கல்வி முறையில் முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகளை முற்றுகையிட்டு மாணவர்கள் அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம், நாளடைவில் தொழிலாளர்களின் ஆதரவோடு விரிவடைந்தது. அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும் தீ வைத்தும் போராட்டக்காரர்கள் செயல்பட்டனர். கடைகள் சூறையாடப்பட்டு, போலீசாருடன் கடும் மோதல் ஏற்பட்டது. நாடெங்கும் வன்முறை பரவியதையடுத்து 2,400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பிரான்சில் வசிக்கும் இந்தியர்களே உஷார்! போராட்டம் தீவிரம்? தூதரகம் வெளியிட்ட அவசர எச்சரிக்கை!
போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதையடுத்து, பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பிலிப் பாப்டிஸ்ட் சலுகைகளையும் சீர்திருத்தங்களையும் அறிவித்தார்.
மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த பார்கோர்சப் என்ற பல்கலைக்கழக சேர்க்கை ஆன்லைன் தளம் 2028ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்பட்டு புதிய முறை அறிமுகப்படுத்தப்படும். 2027 முதல் சேர்க்கைக்கான தகுதி நிபந்தனைகள் வெளிப்படையாக வெளியிடப்படும்.

நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களும் மாணவர்களுக்கு விளக்கப்படும். உயர்கல்வியில் குறிப்பாக தொழிற்கல்விப் பிரிவுகளில் புதிதாக 15,000 இடங்கள் உருவாக்கப்படும். பணவீக்கத்திற்கு ஏற்ப மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அதிகரிக்கப்படும்.
பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு அதிகபட்சமாக 28 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆசிரியர் குறைப்பு ரத்து செய்யப்பட்டு கூடுதலாக 500 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் கட்டிடங்களைப் புதுப்பிக்கவும் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் சுமார் 5 பில்லியன் யூரோ நிதி வழங்கப்படும்.
அரசின் இந்த வாக்குறுதிகளைச் சில மாணவர் அமைப்புகள் வரவேற்றாலும், கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளன. அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 5ஆம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்களும் மாணவர் கூட்டமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளதால், பிரான்சில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.
இதையும் படிங்க: பிரான்சில் கட்டுக்கடங்காத வன்முறை? தீவிரமடையும் பதற்றம்! பல நகரங்களில் ஊரடங்கு அமல்! 2,400 பேர் கைது!