கோவை மாவட்டத்தில் விசாரணை என்ற பெயரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு வழங்க வேண்டிய காவலரே இதுபோன்ற குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
கோவை மாநகர காவல்துறையின் துடியலூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் வினோத்குமார் (35). இவர் கடந்த ஜூலை 15-ஆம் தேதி, சக காவலர்களுடன் வெள்ளக்கிணறு பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில், காவலர் வினோத்குமார் இளம்பெண்ணை தனியாக அழைத்துச் சென்று விசாரிப்பதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திமுக கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது! சாமானியர்களுக்கு இடமில்லை! கவுன்சிலர் பாபு குற்றச்சாட்டு!

அந்த இடத்தில் வேறு யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி, இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக தனது ஆண் நண்பரிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, இளம்பெண்ணின் நண்பர் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணை நடத்தப்பட்டதில், காவலர் வினோத்குமார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வினோத்குமார் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் துடியலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கவலைகள் எழுந்து வரும் நிலையில், காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் மீதே இத்தகைய குற்றச்சாட்டு எழுந்திருப்பது சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வேலுமணி, செந்தில்பாலாஜி இல்லாமல் தேர்தல் தயாரிப்பில் கட்சிகள்... கோவையில் மாறும் அரசியல் கணக்கு!