டெல்லி: தலைநகர் டெல்லியில் அதிர்ச்சி கொடுத்த ஒரு கொலை வழக்கு வெளியாகியுள்ளது. 27 வயதான ஸ்வாட் கமாண்டோ பிரிவில் பணியாற்றிய காஜல் சவுத்ரி எனும் பெண், வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் கணவனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் கணவன் அங்கூர், கொலைக்கு முன் காஜலின் சகோதரரை போனில் அழைத்து “உன் அக்காவை கொலை செய்யப் போகிறேன், இணைப்பை துண்டிக்காமல் நடப்பதை ரெக்கார்ட் செய்து கொள்” என்று கூறியது நெஞ்சை உறைய வைக்கிறது.
காஜல் சவுத்ரி டெல்லி போலீஸ் ஸ்வாட் கமாண்டோ பிரிவில் பணியாற்றி வந்தார். அவரது கணவர் அங்கூர் பாதுகாப்பு அமைச்சகத்தில் க்ளார்க் பணியில் இருந்தார். இருவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டு வந்தது. ஜனவரி 22-ஆம் தேதி காலை மீண்டும் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: கடையேழு வள்ளல்னு நினைப்போ? தரமான உணவுக்கூட கொடுக்க முடியலையா? அண்ணாமலை ஆவேசம்..!
ஒருகட்டத்தில் அங்கூர் காஜலின் சகோதரர் நிகிலை போனில் அழைத்தார். “நான் உன் அக்காவை அடித்துக் கொலை செய்யப் போகிறேன். போனை துண்டிக்காமல் இரு, நடப்பதை ரெக்கார்ட் செய்து கொள்” என்று சொல்லிவிட்டு, உடற்பயிற்சிக்கு பயன்படும் டம்பிள்ஸை எடுத்து காஜலின் தலையில் கடுமையாக அடித்துள்ளார்.
காஜல் படுகாயமடைந்து காசியாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐந்து நாட்கள் உயிருக்குப் போராடிய பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போது காஜல் 4 மாத கர்ப்பிணியாக இருந்ததும் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஜலின் சகோதரர் நிகில் அளித்த புகாரின் பேரில் அங்கூர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிகில் கூறுகையில், “என் அக்கா அலறித் துடிப்பதை போன் வழியாக கேட்டபோது நான் நடுங்கிப் போனேன். அன்று காலை அங்கூர் என்னை அழைத்து கோபமாக பேசினார். நான் சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அக்கா அன்றுதான் அத்தனை கொடுமைகளையும் சொன்னார். பின்னர் போனை பறித்துக்கொண்டு அடிக்கத் தொடங்கினார். அக்காவின் அலறல் சத்தம் என் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் பெண்கள் பாதுகாப்பு, வரதட்சணை கொடுமை குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கமாண்டோ பெண்ணே வீட்டுக்குள் பாதுகாப்பின்றி இருந்தது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: கலப்பட நெய் கலந்து ரூ.250கோடி ஊழல்! பூதாகரமாகும் திருப்பதி லட்டு விவகாரம்! சிபிஐ குற்றப்பத்திரிகை!