திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு நடைபெற்ற திமுக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நபர், பட்டப்பகலில் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை பழிக்குப் பழியாக நடந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரரும் திமுக பிரமுகருமான ‘பாத்ரூம்’ முருகன் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் காரில் கடத்தப்பட்டு, ஓடும் காரிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் கணக்கு விவகாரம் தொடர்பான முன்விரோதம் இந்த கொலைக்கு காரணமாக இருந்ததாக அப்போது கூறப்பட்டது. இந்த வழக்கில் முருகனின் கார் ஓட்டுநர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர்.
இந்த நிலையில், அந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வீரபத்திரன், அக்டோபர் 6-ம் தேதி காலை தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். திண்டுக்கல்–நத்தம் நெடுஞ்சாலையில் நொச்சி ஓடைப்பட்டி அருகே சென்றபோது, அவர்களை மர்ம கும்பல் வழிமறித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கணவனை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கியதாக நாடகம்? கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி உட்பட 4 பேருக்கு ஆயுள்!
திடீரென நடந்த தாக்குதலில் வீரபத்திரன் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டப்பட்டார். தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பார்த்த அதிர்ச்சியில் அவரது மனைவி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார். அவரை போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார், வீரபத்திரனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, கொலையாளிகள் தப்பிச் செல்ல பயன்படுத்தியதாக கூறப்படும் ஸ்கார்பியோ கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து சில பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகன் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக வீரபத்திரன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு முன்விரோதம் காரணமா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் இருந்த சாலையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜயவாடாவை உலுக்கிய கொடூர கொலை! பெண்ணின் உடலை 9 துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசிய கசாப்புக்கடைக்காரர்!!