நாசிக்: மஹாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள ஒரு பிரபல ஐ.டி. நிறுவனத்தின் பி.பி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்ற கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் தொல்லை வழக்கில் புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக 18 முதல் 25 வயது வரையிலான இளம் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நிறுவனத்தின் ‘டீம் லீடர்’கள் சிலர் பெண்களிடம் அத்துமீறியதும், மதம் மாற மறுத்த பெண்களுக்கு தொல்லை கொடுத்ததும் உறுதியானது. இதுவரை ஒரு பெண் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டாளராக தேடப்படும் மனித வளப் பிரிவு அதிகாரி நிடா கான் மீதான விசாரணையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி போலி சாமியார் கைவரிசை!! உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி!

பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஊழியர் அளித்த புகாரில், நிடா கான் தனக்கு புர்கா ஒன்றையும் மத போதனை புத்தகங்களையும் கொடுத்ததாகவும், தன் மொபைலில் சில மத செயலிகளை நிறுவி, புர்கா அணிவது, நோன்பு இருப்பது, தொழுகை செய்வது உள்ளிட்டவற்றை கற்றுக்கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து மதம் மாறும்படி வற்புறுத்திய நிடா கான், மதம் மாறாவிட்டால் குடும்பத்துக்கு பாதகம் ஏற்படும் என்று எச்சரித்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, அந்தப் பெண்ணின் பெயரை ‘ஹனியா’ என்று மாற்றி, அவரை மலேஷியாவுக்கு வேலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மஹாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.டி. துறையில் பணியாற்றும் இளம் பெண்களுக்கு எதிரான இத்தகைய சம்பவங்கள் பணியிட பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. போலீசார் நிடா கானை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முழு வழக்கிலும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!