கிரானைட் வீரமணி தொடர்பான பாலியல் வன்கொடுமை புகார்களின் விசாரணையை மறைக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 4 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் புகார் அளித்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரானைட் வீரமணி தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி ஆஜராகி, வழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்களின் விசாரணையை மறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வழக்கில் பலர் தற்போது புகார் அளித்து வருவதாகவும், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திடீர் திருப்பம்! ஐகோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு!

மேலும், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வருவதற்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் நடவடிக்கை முக்கிய காரணமாக இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேல் விசாரணைக்கு அந்த நீதிபதி உத்தரவிடாமல் இருந்திருந்தால், விவகாரம் தொடர்ந்து வெளிவராமல் போயிருக்கக்கூடும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
இதுவரை சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் 4 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மேலும் 3 பேர் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து சட்டப்படி புகார் அளிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
வழக்கு தொடர்பான செய்திகளை ஊடகங்கள் கூடுதல் கவனத்துடனும் பொறுப்புடனும் வெளியிட வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில், செய்தி வெளியிடும்போது சட்ட விதிமுறைகளை கடைப்பிடிப்பது முக்கியமாகும்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ரூ.100 கோடி மோசடி வழக்கு! கைது செய்யக்கூடாது என உத்தரவிட முடியாது! அன்பில் மகேஸ் வழக்கில் ஐகோர்ட் அதிரடி!