குஜராத்: மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் ரசாயனம் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தியதாக கூறப்படும் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பாவ்நகர் மாவட்டம் கோகா தாலுகாவுக்கு உட்பட்ட கராகடி கிராமத்தில் நடைபெற்ற விருந்தில் சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பலருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலில், விஷச்சாராயத்தை அருந்திய ஒருவர் உயிரிழந்த நிலையில், வர்தேஜ் காவல் நிலையத்தில் தற்செயலான மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதில், ரசாயனம் கலந்த மதுவை அருந்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து 21 பேரை குற்றவாளிகளாக குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

பாவ்நகர் மண்டல காவல் துறைத் தலைவர் ஆர்.வி. அஸாரி கூறுகையில், குஜராத்தில் மது உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வுக்கு சட்டப்படி தடை உள்ளது. இருப்பினும் சட்டவிரோதமாக விஷச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விசாரணைக்காக மாநில கண்காணிப்புப் பிரிவு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் பிரபலமான இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபான பிராண்டின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பாட்டில்களில் இருந்த மதுவை அருந்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதே பிராண்டில் போலியாக தயாரிக்கப்பட்ட பல பாட்டில்கள் சட்டவிரோத மது விற்பனையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த கள்ளச்சாராய பாட்டில்கள் மத்தியப் பிரதேசத்தில் இருந்து குஜராத்துக்கு கொண்டு வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவை எங்கு தயாரிக்கப்பட்டன, யார் தயாரித்தனர், பாவ்நகருக்கு யார் அனுப்பினர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சட்டவிரோத மதுவை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் பலரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலத்திலேயே கள்ளச்சாராயம் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: போலீஸ் தாக்கியதில் மரணம்?! “என் சாவுக்கு அந்த 5 பேர்தான் காரணம்”! இறப்புக்கு முன் வீடியோ வெளியிட்ட சிவனடியார்!