தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர், பெரிய கோட்டை கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த வினோத்குமார் (38), புகைப்படக் கலைஞராகவும் டிரைவராகவும் பணியாற்றி வந்தவர், தனது மனைவி நித்யா (35) கள்ளக்காதலனுடன் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சலில், தனது மூன்று குழந்தைகளை அரிவாளால் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வினோத்குமார் - நித்யா தம்பதிக்கு ஓவியா (12, 6-ஆம் வகுப்பு), கீர்த்தி (8, 3-ஆம் வகுப்பு) என்ற மகள்களும், ஈஸ்வரன் (5) என்ற மகனும் இருந்தனர். ஆறு மாதங்களுக்கு முன், நித்யா, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் வழியாக ஏற்பட்ட பழக்கத்தால், கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த வினோத்குமார், மனைவியை மீண்டும் அழைத்து குடும்பம் நடத்த முயன்றார். ஆனால், நித்யா மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மனவேதனையும், மூன்று குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பும் வினோத்குமாரை மன உளைச்சலில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: தங்கக்கட்டி பிரியாணி ஓனர் தீக்குளிப்பு! வேகமாக உச்சிக்கு போனவர்.. கள்ளக்காதலில் வீழ்ந்த கதை!

அக்டோபர் 10, 2025 அன்று மாலை, வினோத்குமார் குழந்தைகளுக்கு பலகாரங்கள் வாங்கி கொடுத்து சாப்பிடச் சொன்னார். குழந்தைகள் ஆசையாக சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மனதை கல்லாக்கிய வினோத்குமார், முதலில் ஈஸ்வரனை, பின்னர் ஓவியா மற்றும் கீர்த்தியை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். மூன்று குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, வினோத்குமார் மதுக்கூர் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார்.
தகவலறிந்த பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், வினோத்குமாரிடம் விசாரணை நடத்தினார். மதுக்கூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்தக் கொடூரச் சம்பவம், உள்ளூர் மக்களிடையே பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: BREAKING! வந்தாச்சு தீபாவளி போட்டாச்சு போனஸ்! தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ்! முதல்வர் அறிவிப்பு!