வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை அமைப்புகள் மீதான சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பன்னாட்டு நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. இணையதளங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சார்ந்து வங்கி சேவைகள் இயங்கி வரும் நிலையில், சைபர் தாக்குதல்கள் நிதித் துறையின் செயல்பாடுகளைப் பாதிக்கக்கூடும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம்
வங்கிகள் தற்போது பணப் பரிமாற்றம், கணக்கு மேலாண்மை, கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. இதனால் வங்கிகளை மட்டுமின்றி, அவற்றுடன் இணைந்து செயல்படும் பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பச் சேவை வழங்குநர்களையும் குறிவைத்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக பன்னாட்டு நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரு பெரிய வங்கி அல்லது முக்கியமான பணப்பரிவர்த்தனை அமைப்பு சைபர் தாக்குதலுக்கு உள்ளானால், அதன் பாதிப்பு குறிப்பிட்ட நிறுவனத்துடன் மட்டும் நின்றுவிடாது. வாடிக்கையாளர்கள் பணம் அனுப்புவது, பணம் பெறுவது, வங்கிக் கணக்கில் உள்ள தொகையைப் பயன்படுத்துவது போன்ற அன்றாடச் சேவைகள் பாதிக்கப்படலாம்.
இதையும் படிங்க: ஹேக்கர்களின் பிடியில் ஹைதராபாத் ஏர்போர்ட்!! வெளியானது அதிர்ச்சி பதிவுகள்!! சைபர் போலீசில் புகார்!
மேலும், இதுபோன்ற பாதிப்புகள் மற்ற நிதி நிறுவனங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. இதனால் கடன் வழங்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட நிதிச் சேவைகளிலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் சைபர் பாதுகாப்புத் துறையில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தாக்குதல்களை மேலும் நுட்பமாக நடத்த முடியும் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில், சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து, தாக்குதல்களைத் தடுப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு உதவக்கூடும்.
ஒரே தொழில்நுட்ப நிறுவனத்தை நம்பும் வங்கிகள்
பல வங்கிகள் ஒரே தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களைச் சார்ந்திருப்பதும் முக்கியமான அபாயமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய நிறுவனங்களில் தொழில்நுட்பக் கோளாறு அல்லது சைபர் தாக்குதல் ஏற்பட்டால், அவற்றைச் சார்ந்த பல வங்கிகளின் சேவைகளும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்களது சைபர் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என பன்னாட்டு நிதியம் வலியுறுத்தியுள்ளது. தாக்குதல்கள் நிகழ்ந்தாலும் அத்தியாவசிய நிதிச் சேவைகள் தொடர்ந்து செயல்படுவதற்கான மாற்று ஏற்பாடுகளையும் உருவாக்க வேண்டும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.2,000க்கு மேல் UPI பணம் அனுப்புறீங்களா? புதிய கட்டணம் அமலாகுமா? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!