சர்வதேச விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தினத்தை (World ATC Day) முன்னிட்டு, சென்னை விமான நிலைய ஏடிசி நிர்வாகம் சார்பில் மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் விமானப் போக்குவரத்து மேலாண்மையின் முக்கிய அம்சங்கள், செயல்பாட்டுப் பாதுகாப்பு, வான்வழியில் திறமையான மற்றும் பாதுகாப்பான விமான வழிநடத்துதலை உறுதி செய்தல் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் முக்கியப் பங்களிப்பு ஆகியவை குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் வல்லுநர்கள் மற்றும் பங்குதாரர்கள் விரிவாகக் கலந்தாலோசித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை விமான நிலைய ஏடிசி பொது மேலாளர் கே. முரளி, "இன்று 65-ஆவது ஏடிசி தினம் கொண்டாடப்படுகிறது. விமானப் பயணிகளுக்கு விமானிகள் மற்றும் விமான நிலையப் பணியாளர்களை மட்டுமே தெரியும்; திரைக்குப் பின்னால் இருந்து இயங்கும் எங்களைப் போன்றவர்கள் வெளியே தெரிவதில்லை. ஆனால், வானில் ஒரு விமானம் பாதுகாப்பாகப் பறந்து தரை இறங்குவதற்கு மூளையாகச் செயல்படுவது எங்களது கட்டுப்பாட்டு அறைதான். 1930 மற்றும் 40-களில் சென்னை விமான நிலையத்தில் கரும்பலகையில் விமானங்களின் உயரம், வேகம் ஆகியவற்றைக் குறித்துக் கணக்கிட்டு வழிநடத்தினார்கள். ஆனால் இன்று எத்தனை விமானங்கள் வந்தாலும், எந்த நாட்டிலிருந்து வந்தாலும் துல்லியமாகக் கட்டுப்படுத்தும் அதிநவீன வசதிகளை நாம் கொண்டுள்ளோம்.
இதையும் படிங்க: மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.4 கோடி கஞ்சா பறிமுதல்! சென்னை பெண் பயணி கைது!
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு இணையான உள்கட்டமைப்புடன் நாம் இயங்கி வருகிறோம். கட்டுப்பாட்டு அறைக்கும் விமானிக்கும் இடையே மூன்று வகையான தொடர்புகள் எப்போதும் இருக்கும். கடந்த 2016 பெருவெள்ளத்தின் போது கூட விமானிகளுடனான தொடர்பு துண்டிக்கப்படவில்லை. அண்டை நாடுகளின் வான்வழியைப் பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்தாலும், மாற்று வழிகளை ஆராய்ந்து விமானங்களைச் சீராக இயக்கும் திறன் நமக்கு உண்டு. மேலும், ஏடிசி பிரிவில் ஊழியர் பற்றாக்குறை இல்லை என்றும், புதிதாக 845 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் இன்றைய கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்" என்று விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: நடுவானில் திக்... திக்...!! - 36,000 அடி உயரத்தில் மரண போராட்டம்... சென்னையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்...!