மத்தியப் பிரதேசத்தில் மாதச் சம்பளம் பெறும் தலைமை காவலர் ஒருவர், வருமானத்துக்கு அதிகமாக ரூ.65 கோடிக்கும் மேல் சொத்துகளைக் குவித்ததாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூரில் பணியாற்றும் பெரோஸ் கான் என்பவர் தொடர்பாக லோக்ஆயுக்தா போலீசார் நடத்திய சோதனைகள் மற்றும் ஆவண ஆய்வில், ஏராளமான நிலங்கள், வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட சொத்துகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
50-க்கும் மேற்பட்ட சொத்துகள்?
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் காவல் துறையில் தலைமை காவலராகப் பணியாற்றி வருபவர் பெரோஸ் கான். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்துள்ளதாக லோக்ஆயுக்தா போலீசாருக்குப் பல புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது வீடு மற்றும் குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் கூறும் வெளிப்படைத்தன்மை எங்கே? அரசாணைகள், புதிய நியமனங்கள்? அரசு இணையதளம் குறித்து எழுந்த புகார்!
தொடக்கத்தில் சில கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், ஆவணங்களை ஆய்வு செய்தபோது சொத்து மதிப்பு ரூ.65 கோடியைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது.
பெரோஸ் கான், அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் பெயர்களில் 50-க்கும் மேற்பட்ட நிலங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பெரிய வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 ஆண்டுகால சம்பளம் ரூ.75 லட்சம்!
காவல் துறையில் கடந்த 24 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பெரோஸ் கானின் பணிக்காலச் சம்பள வருமானம் சுமார் ரூ.75 லட்சம் மட்டுமே என அதிகாரிகள் கணக்கிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிற சட்டப்பூர்வ வருமானங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், அவரது மொத்த வருமானம் அதிகபட்சமாக ரூ.1.94 கோடி வரை இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சொத்துகளின் மதிப்பு ரூ.65 கோடியைத் தாண்டியிருப்பது விசாரணையில் முக்கிய அம்சமாக உள்ளது. இந்தச் சொத்துகள் எவ்வாறு வாங்கப்பட்டன, அவற்றுக்கான பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நிலங்களை மிரட்டி வாங்கியதாகப் புகார்
பெரோஸ் கான் நீண்டகாலமாகப் பணிக்கு வராமல் முறைகேடாக விடுப்பில் இருந்ததாகவும், தனது காவல் துறை அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலங்களை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பெரோஸ் கான் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சொத்துக் குவிப்பில் காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் லோக்ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை முடிவுகளின் அடிப்படையில் சொத்துகளின் மதிப்பு, அவற்றின் உரிமை மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Non-veg Not Allowed! கேரள கவர்னர் மாளிகையில் அசைவ உணவுக்குத் தடை! ஆளுநரின் உத்தரவால் வெடித்த சர்ச்சை!"