மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மது அருந்தியதை கண்டித்த வளர்ப்புத் தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக 15 வயது வளர்ப்பு மகன் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் முதலியார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சியாம் சுந்தர்ராஜன் (36). தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த முத்துமீனா சுந்தர் என்பவருடன் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. முத்துமீனாவின் இரண்டு மகன்களையும் தனது சொந்த பிள்ளைகளைப் போன்று சியாம் சுந்தர்ராஜன் அன்புடன் கவனித்து வளர்த்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், முத்துமீனாவின் 15 வயது இளைய மகன், சோழவந்தான் தென்கரை பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (26) என்பவருடன் பழகி மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சியாம் சுந்தர்ராஜன், சிறுவனின் பழக்கத்தை மாற்றும் நோக்கில் அவரை தொடர்ந்து கண்டித்து வந்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார் உதயநிதி! அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி தாக்கு!!

இந்த சூழலில், சம்பவத்துக்கு முந்தைய இரவு சியாம் சுந்தர்ராஜன் இருசக்கர வாகனத்தில் வாடிப்பட்டியில் இருந்து சோழவந்தான் நோக்கி சென்று கொண்டிருந்தார். சோழவந்தான் அரசு மதுபானக் கடை அருகே சென்றபோது அவரை வழிமறித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவருடைய வளர்ப்பு மகனும், ராம்குமாரும் சேர்ந்து சியாம் சுந்தர்ராஜனை அரிவாளால் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சோழவந்தான் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவாக இருந்த 15 வயது சிறுவன் மற்றும் ராம்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மது பழக்கத்தை கண்டித்த வளர்ப்புத் தந்தையே வளர்ப்பு மகனால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம் சோழவந்தான் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் மதுரை வருகையை முன்னிட்டு நாளை டிரோன்களுக்கு தடை! பாதுகாப்பு பணி தீவிரம்!